(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக  பொலிஸ் அத்தியட்சகர்கள்  நால்வரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் கொத்தணி காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்க சட்டவிதிகளுக்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 33 பொலிஸ் பிரிவுகளிலும்,கொழும்பு மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும்,குளியாப்பிட்டி பகுதியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

இந்தக் காலப்பகுதியில்  அத்தியவசிய சேவை நிலையங்களில் பணிபுரிவோர்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும், தொழிற்சாலைகளும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்போது அவர்களது அனுமதி பாத்திரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளமை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையில் , இதுதொடர்பில் அவதானம் செலுத்திய மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் அந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக பொலிஸ் அத்தயட்சகர்கள் நால்வரை கடமையில் ஈடுப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள களனி,கம்பஹா,நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுகளிலே இந்த விசேட அதிகாரிகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய, களனி பொலிஸ் பிரிவுகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.ஆர்.ஏ.குணரத்ன கடமையில்  ஈடுப்படுத்தப்பட்டுள்ளார். 071-8591605 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொண்டு அவருடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, கம்பஹா மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் 071-8591610 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷித்த குமாரவையும்,நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் 071-8591632 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொண்டு பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த அமரதுங்கவையும், வட கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் 071-8591574 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிரஞ்சன் அபேவர்தனவையும் தொடர்பு கொண்டு தங்களுக்கு  அவசியமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய அத்தியவசிய சேவையாளர்கள்,ஊடகவியலாளர்கள்,தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாத்திரமின்றி ,திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் விழாக்களை நடத்த எதிர்ப்பார்த்திருப்பவர்களுக்கும் மேற்படி விடயங்கள் தொடர்பில் சந்தேகங்கள் காணப்பட்டால் அது தொடர்பிலும் இந்த அதிகாரிகளிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.