(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலைப்பு தொடர்பான முதற்கட்ட வரைபு எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய அரசியலைப்பு உருவாக்கப்படும். புதிய அரசியலமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இவரது வாக்குறுதியினை அடிப்படையாகக் கொண்டு 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவுடன் இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில்   தெளிவுப்படுத்துவது அவசியமாகும்.

இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.நிறைவேற்றதிகார முறைமையினால் பாராளுமன்றத்துக்கும்,ஜனாதிபதிக்கும் இடையில் ஆரம்ப காலத்தில் இருந்து நெருக்கடி ஏற்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றதிகாரம் முன்றாக பிளவுப்பட்டது.இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் பலவீனமடைந்தது.ஒரு தனிநபருக்கு அதிகாரங்கள் வரையறுக்கப்படாமல் வழங்குவது பொருத்தமற்றது என்பது லங்கா சமசமாஜக் கட்சியின் கொள்கையாகும்.இதில் எவ்வித மாற்றமும் கிடையாது.

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்த கூடாது என்பதை ஒன்றினைந்து சுட்டிக்காட்டினோம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகார தடை கொண்டு வரப்பட்டது. 20 ஆவது திருத்தத்தில் இது நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.