நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோஸில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மீது பொலிஸாரின் அத்துமீறிய தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. பொலிசாரின் இந்த கொடூர தாக்குதல்களில் பலர் காயமடைந்தும், உயிரிழந்தும் வருகின்றனர்.

குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் பரவலான ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 56 பேர் இறந்துள்ளனர். இதில் செவ்வாய்க்கிழமை மாத்திரம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவங்களை கண்டித்து அந்நாட்டின் மிகப்பெரிய நகரான லாகோஸில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். 

எனினும் போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக லாகோஸ் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 

மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது.

இந்த மோதலின்போது பாதுகாப்பு படையினர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் போராட்டக்காரர்களில் 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.