ஹப்புத்தளை பிரதேச சபையின் அடுத்தாண்டிற்கான (2021) வரவு செலவுத்திட்ட நிதி அறிக்கை பதினைந்து அதிகப்படியிலான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

ஹப்புத்தளைபிரதேசசபையின் தலைவர் பி. கண்ணா–கந்தசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அவ்வேளையில், 2021ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்ட நிதிஅறிக்கை, சபைத் தலைவரினால், சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. அதையடுத்து, சபை அமர்வில் குறிப்பிட்ட அறிக்கை குறித்து வாதவிவாதங்கள் இடம்பெற்றன.

இறுதியில், அடுத்தாண்டிற்கான நிதி அறிக்கை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இவ்வாக்கெடுப்பில், சபையின் உபதலைவர் நிமால் அமரசிரி உள்ளிட்ட நால்வர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் ஆர். சி. சுதர்சன வரவு–செலவுத் திட்ட நிதி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தார். ஏனைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவருமாக பதினைந்து பேரும், சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கைக்கு இணைந்து ஆதரவாக வாக்களித்தனர். 

ஹப்புத்தளை பிரதேசசபையில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி சார் உறுப்பினர்கள் 20 பேர் இருந்து வருகின்றனர். பதுளை மாவட்டத்திலேயே, பிரதேசசபையொன்றில் தமிழர் ஒருவர் தலைவராக இருந்து வருவது, ஹப்புத்தளை பிரதேசசபையிலென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.