(பாராளுமன்ற நிருபர்கள்)

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் எம்.பி.யை வியாழக்கிழமை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன்  பாராளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென நேற்றும் இன்றும் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் வலியுறுத்தியபோதும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனால் அவருக்கு அனுமதி வழங்க முடியாதென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட் டதாக சபாநாயகரினால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே பாராளுமன்ற அதிகார மற்றும் சிறப்புரிமை சட்டத்தின் கீழ் அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பு மாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு அறிவிக்க இன்று நடந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

எனினும் கொரோனா சட்டத்தை இறுக்கமாக அமுல்படுத்துமாறு கூறிக்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து வரவேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 20 ஆவது திருத்தத்துக்கு மூன்றில்  இரண்டு பெரும்பான்மை கிடைக்காமல் போகும் சாத்தியமும் உள்ளது.  எனவே வியாழக்கிழமைக்குள் மூன்றில் இரண்டு ஆதரவை பெறுவதற்கான தீவிர முயற்சியில் அரசு இறங்குமென எதிர் பார்க்கப்படுகின்றது.