(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

நடைமுறயில் இருக்கும் அரசியலமைப்பு நிலையானது அல்ல. ஜனநாயகத்தை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியாது. அதனால்தான் புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அத்துடன் ரணில் விக்ரமசிங்க 19 ஐ ஏற்படுத்தி சமஷ்டி அரசியலமைப்பொன்றையே மேற்கொள்ள முயற்சித்தார் என  அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பை மேற்கொள்வதற்கான இடைக்கால திருத்தமாகவே 20ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. தற்போது இருக்கும் அரசியலமைப்பில் இதுவரை 19 தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அந்த திருத்தங்கள் அனைத்தும் இருக்கும் அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

2015 இல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதுடன் அதிகாரத்தில் இருந்து பிரதமர் தி.மு ஜயரத்னவை எந்த அடிப்படையும் இல்லாமல், ஜனநாயகத்துக்கு விராேதமான முறையில் பதவியில் இருந்து நீக்கினார்கள். அப்போதும் அந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இருக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ளவும் புதிய அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கும் இடையிலே 19ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 19ஆம் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது இறுதி நேரத்தில் 18 திருத்தங்களை மேற்கொண்டார்கள்.

இந்த திருத்தத்தினால் பாரிய முரண்பாடுகள் ஏற்படும் என நாங்கள் அன்று தெரிவித்தோம். அதுதான் இறுதியில் ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலே 20 ஆவது திருத்தத்தை கொண்டுவந்திருக்கின்றோம். அவ்வாறு இல்லாமல் புதிதாக எந்த திருத்தமும் இதில் உள்வாங்கவில்லை.

அத்துடன் அரசியலமைப்பு சபை ஏற்படுத்தி பாராளுமன்றத்துக்கு வெளியில் இருப்பவர்களை அதற்கு நியமித்தார்கள். இதன்போதும் அதனை செய்யவேண்டாம். அது பிரச்சினையை ஏற்படுத்தும் என நாங்கள் முன்னாள் பிரதமருக்கு தெரிவித்திருந்தோம். அதனால்தான் பிரதம நீதியரசர், பொலிஸ்மா அதிபர் நியமனங்களின்போது முரண்பாடுகள் ஏற்பட்டன.

இந்த பிரச்சினைகளை இல்லாமலாக்கும் வகையிலே 20ஆவது திருத்தத்தில் அரசியலமைப்பு பேரவையை நீக்கி, பாராளுமன்ற சபையை ஏற்படுத்தி இருக்கின்றோம்.