கொரோனா  தொற்றுக் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தேவை ஏற்படும் பட்சத்தில் இது ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமென இராணுவத்தளபதி கூறியுள்ளார். 

இதனிடையே மக்கள் மிகுந்த பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். உணவுப் பொருட்களின் விலைகள் பன் மடங்கு அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 

இதேபோல் தனிமைப்படுத்தல் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா  தொற்றுக் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் அதிகமான பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது. 

இதனால் அப்பிரதேச மக்களுக்கு ரூபா 5000 நிவாரணமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறியுள்ள அவர்,

வடக்கு மாகாணத்திலும் பல பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 292 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இவர்களுக்கு அரசாங்கம் இதுவரை எதனையும் வழங்கவில்லை. எனவே அவர்களுக்கும் நிவாரணமாக 5000 ரூபா வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக சுகாதார ரீதியிலும் சரி பொருளாதார ரீதியிலும் சரி அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வறிய மற்றும் நடுத்தர குடும்பங்களே. 

அன்றாடம் உழைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் மக்களால் இன்று வெளியில் கூட செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

இதனால் அவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். வழமையாக அவர்கள் மேற்கொண்டு வரும் விவசாயச் செய்கை, மீன்பிடி, சிறு வியாபாரம் மற்றும் அன்றாட கூலித் தொழில்களைக்கூட அவர்களால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இனி வரும் நாட்கள் மிகவும் தீர்க்கமான நாட்கள் என இராணுவத் தளபதி கூறியுள்ளார். இதனடிப்படையில் ஊரடங்குச்சட்டம் விஸ்தரிக்கப்படுமானாலோ, மாகாணங்களுக்கியடையே தொடர்புகள் துண்டிக்கப்படுமானாலோ நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க முடியாது போகும்.

குறிப்பாக கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பலரும் அங்கு செல்வதை மட்டுப்படுத்தி உள்ளனர். 

இதனால் வியாபார நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன. வியாபாரிகள் பலரும் வீதிகளில் வைத்து தமது பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த நிலை மேலும் மோசமானால் மக்களின் நடமாட்டம் இல்லாமல் போவதுடன் வியாபார நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படும்.

இதனால் வறிய, நடுத்தர குடும்பங்கள் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரும்.

தொற்று மேலும் வீரியம் அடைந்தால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இன்று காணப்படுகின்றது. 

வைத்தியசாலைகளில் போதுமான இடவசதி  காணப்படுமா? எவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்வது என மக்கள் அங்கலாய்கின்றனர்.  

கடந்த தடவை போலன்றி இந்த தடவை நாடு முழுவதும்  தொற்றாளர்கள் உள்ளமையே இதற்குக் காரணம்.

இந்நிலையில் அரசு சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க  கோரினாலும் அதனை பலரும் உதாசீனம் செய்து வருவதையே காணமுடிகின்றது. 

இவற்றைச்சட்டம் போட்டு தடுக்க முடியாது. தானாக மக்கள் உணர்ந்து நடப்பது ஒன்றே அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்