(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் தவறியுள்ளனர். மேலும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை கண்டுகொள்ளாமல் சில அதிகாரிகள் அங்கே நின்று கொண்டிருந்தனர். இதற்கான சாட்சி என்னிடம் உள்ளது என குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே தினேஷ் குணவர்தன எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

யாழ்.பல்கலைக்கழகத்தில் இவ்வாறான மோதல்  சம்பவம் எதுவும் கடந்த  காலத்தில்  இடம்பெற்றிருக்கவில்லை. குறித்த தினமும் கூட வரவேற்பு நிகழ்வின் போது காலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. பகல் உணவு வரை  அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெற்றிருக்கவில்லை. பிற்பகல் 2 மணியளவில் தான் அடிப்படைவாத குழுவொன்று பல்கலைக்கழகத்தினுள் இனவாத நிலைமையை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டிருந்தது. 

அந்த சம்பவத்தின் போது பொலிஸாரும் கூட காலம் தாழ்ந்துதான் சம்பவ இடத்திற்கு சென்றிருக்கின்றனர். இக்காலப்பகுதிக்குள் மாணவர்களின் பாதுகாப்புக்கு யாரும் இருந்திருக்கவில்லை. மாணர்வர்கள் தங்களது பாதுகாப்புக்காக தாங்களே செயற்பட வேண்டிய நிலைமையொன்றே ஏற்பட்டிருந்தது. 

பல்கலைக்கழக பொறுப்பாளர்கள் கண்களை திறந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்ததுள்ளனர். அதற்கான சாட்சியம் இருக்கிறது. இது பாரதூரமா நிலைமையாகும். பல்கலைகக்கழகம் என்பது பாடசாலை கிடையாது. அது பல்கலைகக்கழகம். எந்தவொரு கலாசார அல்லது இன அழிப்புக்கும் பூர்வாங்கம் ஏற்படுத்தவோ அவ்வாறான சம்பவங்களுக்கோ அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. 

மோதல் சம்பவத்தின் போது எந்தவொரு அதிகாரியும் தமது கடமையை நிறைவேற்ற தவறியிருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி நடவடிக்கைகளை தொடர்வது உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் மீண்டும் பல்லைகக்கழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.