புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் 88 ஆம் கட்டையில் நேற்று இரவு இடம்பெற்ற வீதிவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்துளு ஓயா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற செவ்வாய்க்கிழமை (20) இரவு 11 மணியளவில் புத்தளம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பிரதான வீதியிலிருந்து தெற்கு பகுதியிலுள்ள உள்வீதியில் பயணிப்பதற்கு முற்பட்டபோது, கொழும்பு பகுதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், குறித்த காரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.