(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அமைதி நிலைமைக்கு கொண்டுவர அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கினர். ஆனால் ஒருவர் மாத்திரம் இந்த சம்பவத்தை வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சித்தார் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரவித்தார்.

யாழ். பல்கலைகக்கழத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் அறிக்கைகள் கிடைத்தன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேச முடியும் எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸாநயக்க எம்.பி எழுப்பிய கேள்வியின் பின்னர் அவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 விசாரணை அறிக்கை

மோதல் பிரச்சனை தொடர்பாக  நடைபெறும் விசாரணைகளின் அறிக்கைகள் கிடைத்ததும் அது தொடர்பான அடுத்த நடவடிக்கை பற்றி பேச முடியும். 

அநுரகுமார என்னுடன் பேசினார்

இந்த சம்பவம் இடம்பெற்றதும்  அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. என்னிடம் பேசினார். மாவை சேனாதிராஜா எம்.பி.  உயர்கல்வி அமைச்சர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உள்ளிட்டோருடன் நான் பேசியிருந்தேன். இந்த சம்பவம் பற்றி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஊடகங்களுடனும் பொலிஸாருடனும் பேசியிருந்தார்.

பெரும்பாலானோர் ஒத்துழைப்பு

என்னை பொறுத்த வரையில் இந்த சம்பவமானது சனிக்கிழமை மாலையாகும் போதே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்த சபையிலுள்ள பெரும்பாலானோர் அன்று அமைதியை ஏற்படுத்தக் கோரியிருந்தனர். 

ஒருவர் மாத்திரம் முயற்சி

அன்றைய தினம் இந்த நாட்டிலுள்ள யாரும் இனவாதத்தின் நிமித்தம் செயற்பட்டிருக்கவில்லை. அதற்கு அனைவருக்கும் எனது நன்றிகள்'. எனினும் இந்த மோதல் சம்பவத்தை பயன்படுத்தி  இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருவர் முயற்சித்தார் என்றார்.