பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் செவ்வாய்க்கிழமை பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 6 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கராச்சியின் ஷிரீன் ஜின்னா காலனி பகுதியில் அமைந்துள்ள பஸ் முனையத்தின் பிரதான வாயிலிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வெடிப்பு நடந்ததாகக் கூறப்பட்ட உடனேயே மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்து காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அந் நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன.

குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 1 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதுடன், பந்து தாங்கு உருளைகள் (ball bearings) மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட கூர்மையான பொருட்களும் சம்பவம் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக குண்டுவெடிப்பு அகற்றும் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவோ அல்லது நபரோ இதுவரை உரிமை கோரவில்லை.