• சீனாவிடமிருந்து மேலதிகக் கடன்களைப் பெறுவது உட்பட இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு வெவ்வேறு தெரிவுகள் குறித்து ஆராய்கிறது என்கிறார் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்.

-மீரா ஸ்ரீனிவாசன்

பெய்ஜிங்கிடமிருந்து புதிய 70 கோடி டொலர்கள் கடனைப் பெறுவதற்கு கொழும்பு முயற்சித்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து, ராஜபக்ஷ நிர்வாகம் சீனாவில் தங்கியிருக்கும் போக்கு அதிகரித்து வருவது தொடர்பாக இலங்கையில் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தை விமர்சிப்போரும் கவலை வெளியிடுகின்ற அதேவேளை, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சீனாவிடம்தான் இப்போது பணம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

“ உலக வரலாற்றில் வெவ்வேறுபட்ட காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகள் பெருமளவு பணத்தைக் கொண்டவையாக இருந்து வந்திருக்கின்றன. இப்போது அவ்வாறு பெருமளவு பணத்தைக் கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அதனால், அந்த நாடு உலகம் பூராவும் முதலீடுகளை செய்யும். இது இயல்பானதே.” என்று ‘த இந்து’வுக்கு வழங்கிய நேர்காணலொன்றில் பணம், மூலதனச்சந்தை மற்றும் அரச நிறுவனங்கள் சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறினார். 

உலகம் பூராவும் பரவுகின்ற கொவிட் - 19 கொரோனா வைரஸ்  தொற்று நோயின் விளைவான பொருளாதாரத் தாக்கம் தொடர்பிலான இலங்கையின் பிரதிபலிப்பு பற்றி குறிப்பிடும் போது “ நாம் எல்லோரும் அதைக் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டுமென்று நினைக்கிறேன்.” என்று அவர் சொன்னார். மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய பதவிக்காலத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தவர் கப்ரால்.

இலங்கையின் நிகர உள்நாட்டு உற்பத்தி அநேகமாக 7 சதவீதம் வரை சுருங்கும் என்று உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும்  கவலைக்குரிய வகையில் எதிர்வு கூறியிருக்கின்றன. கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இருக்கின்ற ஆற்றல்களை மதிப்பீடு செய்கின்ற அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்ட மூடிஸ் (ஆழழனல’ள) நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தும் இலங்கையின் ஆற்றலை இரண்டு படிநிலை குறைப்புச் செய்ததுடன் மிகவும் உயர்ந்த கடன் இடர்பாட்டைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையை உள்ளடக்கியுமிருக்கிறது. 

அத்துடன் எதிர்வரும் வருடத்தில் 450 கோடி டொலர்கள் வெளிநாட்டுக் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியும் இருக்கிறது.  வருவாய் வீழ்ச்சி கண்டு வாழ்க்கைச்செலவு வானளாவ உயர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றின் மத்தியிலும் அமைச்சர் கப்ரால் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை உணர்வையே வெளிப்படுத்தினார்.

சீனாவிடமிருந்து மேலதிகக் கடன்களைப் பெறுதல், இந்தியாவுடனும் சீனாவுடனும் நாணயப் பரிமாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வது, சமுராய் மற்றும் பண்டா பிணைமுறிகளைப் பயன்படுத்துவது உட்பட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கை வெவ்வேறு தெரிவுகள் குறித்து பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது என்று கப்ரால் கூறினார்.

உயர்மட்ட சீனத் தூதுக்குழுவொன்று பெய்ஜிங்கிலிருந்து கொழும்பு வந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு திரும்பிச் சென்ற ஒரு வாரகாலம் கடந்துவிட்ட நிலையில் கப்ரால் இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தை இலங்கை சமாளிப்பதற்கு உதவியாகக் கடந்த மார்ச் மாதத்தில் 50 கோடி டொலர்கள் கடனை வழங்கிய சீனா இப்போது மேலதிகமாக 70 கோடி டொலர்கள் கடன்களுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் விடுத்திருக்கும் வேண்டுகோளையும் சாதகமான முறையில் பரிசீலிக்கும் சாத்தியம் இருக்கிறது. தொற்று நோயிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கவும் சீனா உறுதி பூண்டிருக்கிறது. மேலும், இலங்கை சீனாவின் மக்கள் வங்கியுடன் (மத்திய வங்கி) சுமார் 150 கோடி  டொலர்கள் நாணயப்பரிமாற்று ஏற்பாட்டை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

வாணிப நடைமுறைகள்

“அமெரிக்காவுக்கு சீனா 1.5 ரில்லியன் டொலர்கள் கடனை வழங்கியிருக்கிறது. அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. எமக்குக் கிடைக்கப்போகின்ற சுமார் 70 கோடி டொலர்களைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் உலகில் வழக்கில் இருக்கின்ற வாணிப மற்றும் நிதியியல் நடைமுறைகள். ஒவ்வொரு நாடும் தங்களுக்கு சிறந்தவை என்று கருதுகின்றவற்றின் அடிப்படையில் தங்களுக்குரிய நிதியியல் நடைமுறைகளைத் திட்டமிடுகின்றன” என்று கூறிய கப்ரால், ஜப்பான், அமெரிக்கா, இந்தியா போன்ற ஏனைய நாடுகளும் இலங்கையில் பெரியளவில் முதலீடு செய்து வருகின்றன. உதாரணத்திற்கு இலங்கையின் அரசாங்கப் பிணைமுறிகளில் அமெரிக்கா ஒரு  மிகவும் பலம் பொருந்திய முதலீட்டாளராக இருக்கிறது. இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டமொன்றில் நான் கலந்து கொண்டேன். இலங்கையில் 50 இற்கும் அதிகமான இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பணி புரிகிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து விட்டேன் என்று குறிப்பிட்டார்.

வேறுபட்ட வள மூலங்கள்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்கள் சீனக் கடன்பொறியொன்றில் விழுவதிலும் பார்க்க சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு ராஜபக்ஷ நிர்வாகத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெறுவதை அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.

பல்தரப்பு உதவி வழங்குனர்களிடமிருந்து அரசாங்கம் முன்கூட்டியே துரித கடன் உதவியை (வுhந சுயினை ஊசநனவை குயஉடைவைல)   கேட்டிருந்தது. ஆனால், இன்னமும் அது வந்து சேர்ந்தபாடாக இல்லை. இது குறித்து அதிருப்தி வெளியிட்ட கப்ரால், “ துரிதம் என்றால் துரிதம் தான். அது வேறொன்றும் இல்லை. மார்ச்சில் கொவிட்டின் விளைவான பொருளாதார நெருக்கடி இடம்பெற்ற போதிலும், அக்டோபர் ஆகியும் துரித  உதவி எங்கே?” என்று கேட்டார். அரசாங்கம் இன்னமும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் பேசும் என்றும் அவர் சொன்னார்.

சீனக் கடன்பொறி பற்றிய பேச்சுக்களை எல்லாம் தவறானவையென்று நிரூபிப்பதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதி பூண்டிருக்கும் அதேவேளை, வேறு கடன் வழங்கும் வட்டாரங்கள் இலங்கைக்கு கடன் கொடுக்கத் தயாராக இருக்கின்றன போல் தெரிகிறது. இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை ஊக்குவிப்பதற்கு 40 கோடி டொலர்கள் நாணயப்பரிமாற்ற உடன்படிக்கையொன்றில் கடந்த ஜுலையில் இந்திய றிசேர்வ் வங்கி கைச்சாத்திட்டது. அத்துடன் மேலும் 100 கோடி டொலர்கள் நாணயப் பரிமாற்றத்திற்கு இலங்கை விடுத்த கோரிக்கையையும் இந்தியா பரிசீலித்து வருகிறது.

கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியத் தவணையை நீடிக்குமாறு பிரதமர் ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு புதுடில்லி இன்னமும் பதிலளிக்கவில்லை. இலங்கை இந்தியாவிற்கு 96 கோடி டொலர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணையை நீடிப்பதற்கான இருதரப்பு ஏற்பாடுகள் பெருமளவுக்கு உதவ முடியாது என்று கப்ரால் கூறினார்.

“ வளர்ந்து வரும் நாடுகள் எல்லாமே வெளிநாட்டுக் கடனுதவி நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்றன. இது இலங்கைக்கு மட்டுமான தனியான பிரச்சினையல்ல. அண்மையில் சில சர்வதேச நிறுவனங்கள் சுமார் 70  நாடுகளுக்கு உதவிகளை வழங்கியிருக்கின்றன.  அவையெல்லாம் ஒரு இடைக்கால ஏற்பாடாகவே இருந்திருக்கின்றன. இது ஒரு உலகளாவிய பிரச்சினை. இதற்கு உலகளாவிய தீர்வே தேவை” என்று அவர் கூறினார்.

வெளியிலிருந்து பெறுகின்ற உதவிகளைப் பொறுத்தவரை நிலைவரம் கணிசமானளவுக்கு பலவீனமானதாகவே இருக்கின்ற போதிலும், இலங்கை அதிர்ஷ்டவசமானதாகவே இருக்கின்றதென்பது கப்ராலின் பார்வை. நாட்டின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு பெருமளவுக்கு பாதிக்கப்படவில்லை. ஏற்றுமதிகள் உறுதியான முறையில் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. பண அனுப்பீடுகள் திருப்திப்படக்கூடியளவில் உறுதியானவையாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.

“ வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களிடமிருந்து 70 கோடி டொலர்களுக்கும் அதிகமான நிதியை செப்டெம்பரில் இலங்கை பெற்றது. ஏற்றுமதிகள் ஜுலையில் 100 கோடி டொலர்களையும் தாண்டியது. இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் பலனைத் தந்திருக்கின்றன. எமது வெளிநாட்டு நாணயக் கையிருப்பு சுமார் 580 கோடி டொலர்களாக இருக்கும்.  இது ஒரு சௌகரியமான மட்டமென்று நான் கூறவில்லை. இரண்டாவது காலாண்டுக்கான நிகர உள்நாட்டு உற்பத்தி விபரங்களை வெளியிடுவதை சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தாமதித்திருப்பதால் இந்த வருட இறுதியளவில் மாத்திரமே தெளிவான நிலைவரம் வெளிவரும்” என்று கப்ரால் கூறினார்.

ஆனால், இலங்கையின் சவால்கள் முடிந்து விடப் போவதில்லை. வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களிடமிருந்து பண அனுப்பீடுகள் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மேற்காசிய நாடுகளில் பணி புரிகின்ற சுமார் 50,000 தொழிலாளர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள். அதேவேளை, ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்து விட்டார்கள். 67 பேர் தாங்கள் தொழில் பார்த்த நாடுகளில் கொவிட் - 19 இற்கு பலியாகிவிட்டார்கள். உள்நாட்டிலும் கூட ஏற்றுமதி மூலமான வருமானத்தைப் பொறுத்தவரை முக்கியமானதாக இருக்கின்ற ஆடை தயாரிப்பு தொழிற்துறையில் கொவிட் - 19 புதிய அலையொன்று விரைவாகப் பரவிவருகிறது.

வீழ்ச்சியடையும் வருவாய்

அதேவேளை, இலங்கையின் வருவாயும் கடுமையானளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்த வீழ்ச்சி 44000 கோடி இலங்கை ரூபா (சுமார் 230 கோடி டொலர்கள்) என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இறக்குமதியாகின்ற பொருட்கள் மீதான வரிக்குறைப்பை அடுத்து எதிர்வரும் பட்ஜட்டில்  முழுநலம் வாய்ந்த வருவாய் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமென்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அண்மைய உலகப் பொருளாதாரா நிலைவர அறிக்கையில் (றுழசடன நுஉழழெஅiஉ ழுரவடழழம) சர்வதேச நாணய நிதியம் சிபாரிசு செய்த செல்வந்த வரியொன்றை பரிசீலிப்பது உட்பட வருவாயை ஊக்குவிப்பதற்கு வரி அறவீட்டு  முறைகளில் புதியதொரு அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்குமா என்று கப்ராலிடம் கேட்டபோது, “பணக்காரர்களை வறியவர்களாக்குவதன் மூலம் வறியவர்களைப் பணக்காரர்கள் ஆக்கிவிட முடியாது…… மாளிகை வரிகளை விதிப்பதற்கு நாம் விரும்பவில்லை. இந்த அற்பத்தனமான வரிகள் வசதி படைத்த மக்களை முடக்கியிருக்கிறது. தொழில் வாய்ப்புகள் மற்றும் ஆதரவை வழங்கும் அவர்களின் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது. அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜட் சிறிய மற்றும் நடு;த்தரளவிலான தொழில் துறைகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய முறையில் ஒரு சமனிலையான கூட்டுப்பங்காண்மையைப் பிரதிபலிக்கும். அவ்வாறு செய்வது அந்தத் தொழிற்துறைகள் வறியவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு ஊக்குவிக்க முடியும்.