டெல்லி  கெப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஷ்ரா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிக்கொண்டதையடுத்து, அவ்வணிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பிரவின் தூபே சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு  இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி  கெப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த 37 வயதான அமித் மிஷ்ரா கடந்த 3 ஆம் திகதி சார்ஜாவில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தார். இப்போட்டியில் விளையாடிய அவருக்கு பந்து கைவிரலில் பலமாக பட்டதால், கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியாத காரணத்தால் ஐ.பி.எல். போட்டி தொடரிலிருந்து விலகினார்.

இந்நிலையில் அமித் மிஷ்ராவுக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த 27 வயது சுழற்பந்து வீச்சாளரான பிரவின் தூபே நேற்றைய தினம் சேர்க்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்தவரான பிரவின் தூபே கர்நாடக மாநில அணிக்காக விளையாடி வருபவராவார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டியில் அவர் 8 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். கர்நாடக மாநில அணிக்காக 14 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 16 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டெல்லி அணி அவரை கொள்வனவு செய்யும்போது, பெங்களூரு அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராராக  செயற்பட்டு வந்தார்.