அமெரிக்காவில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில்,  84 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அநாட்டில் இதுவரை 2 இலட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவில் அந்நாட்டின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சி அங்கம் வகிக்கிறார். 79 வயது நிரம்பிய ஆண்டனி தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சியில் மிகவும் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடதக்கது.

ஆராய்ச்சியாளர் ஆண்டனியின் ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று பரவியிருக்கும்’ என அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் கூறிய கூற்றுக்கு  ஜனாதிபதி டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளதோடு, ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சி மீதும் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடர்பாக தேர்தல் பிரசார குழு கூட்டத்தில் டிரம்ப் கூறியதாவது:-

என்னவாக இருந்தாலும் எங்களை தனியாக விட்டுவிடுங்கள்  என மக்கள் கூறுகின்றனர். அவர்கள் சோர்வடைந்து விட்டனர் (கொரோனா குறித்த செய்திகளால்). பேஹ்சி மற்றும் கொரோனா தடுப்புக்குழுவில் உள்ள முட்டாள்களின் பேச்சை கேட்டு மக்கள் சோர்வடைந்துவிட்டனர்.

பேஹ்சி இங்கு 500 ஆண்டுகளாக இருந்தது போல் உள்ளார். பேஹ்சியின் பேச்சை கேட்டிருந்தால் 7 இலட்சம் முதல் 8 இலட்சம் இறப்புகளை நாம் சந்திக்க நேரிட்டிருக்கும் என விமர்சித்துள்ளார்.