( செ.தேன்மொழி)

கம்பஹா மாவட்டத்தில் சில பிரதான வீதிகளுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய கந்தானை,சீதுவ மற்றும் ஜா- எல ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல், வாகனங்களிலிருந்து ஆட்களை ஏற்றுவது மற்றும் இறக்குவதும் தடைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில்  கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ,மத்துகம பகுதியில் 3 கிராம சேவகர்பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொழும்பு கண்டி பிரதான வீதியில் யக்கல ,வேயங்கொட ,வீரபுற மற்றும் நிட்டம்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பிரதான வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தபட்டுள்ளது.

இதன்போது, கந்தானை, ஜா-எல மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளில் ஆட்களை ஏற்றவோ, இறக்கவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு மாத்திரமே அப்பகுதியில் இறங்கவோ, வாகனங்களில் ஏறவோ முடியும்.எனத் தெரிவித்துள்ளார்.