பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பி.எம்.எல்-என்) கட்சியின் தலைவர் முஹம்மட் சப்தார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெற்கு நகரமான கராச்சியில் உள்ள அவரது ஹோட்டலில் வைத்து திங்கட்கிழமை அதிகால‍ை சப்தார் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.

சப்தார் என்ன குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டார் என்பது தெளிவாக கூறப்படவில்லை. எனினும் ஞாயிற்றுக்கிழமை பேரணிக்கு முன்னதாக பாகிஸ்தானின் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவின் கல்லறைக்கு விஜயம் செய்தபோது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பின்னர் அவர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன. 

இந்த இயக்கத்தின் மூலம் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இறுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தை நோக்கி மிகப்பெரிய பேரணியை நடத்தவும் முடிவு செய்துள்ளன. 

இந்த நிலையில், கராச்சி நகரில் 11 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.