(நா.தனுஜா)

கொவிட் - 19  வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் பங்களிப்புச்செய்கின்ற சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என்று  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருக்கிறார்.

 மேலும், இச்சந்திப்பின் போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல்  மற்றும் அதனை எதிர்கொள்ளல் ஆகியவற்றுக்கு இடைக்கால மற்றும் துணை மருத்துவசேவை சங்கத்தினரால் வழங்கப்படும் ஒத்துழைப்பிற்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்ததுடன், இதுவிடயத்தில் எதிர்காலத்திலும் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அது மாத்திரமன்றி இதன்போது சுகாதாரத்துறையில் இடைக்கால மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோருக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பணிப்புரை விடுத்தார்.

சுகாதாரக் கட்டமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற சுகாதாரத்துறைசார் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது சுகாதாரப்பிரிவினரின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கத்தக்க நபர்களுடன்  தொடர்ந்தும் நெருங்கிச்செயற்படுகின்ற சுகாதாரப்பிரிவு ஊழியர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஸ்ரீதரன், மேலதிக செயலாளர் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.