13 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஐதராபாத்-கொல்கத்தா, மும்பை-பஞ்சாப் ஆகிய அணிகள் மோதிய இரு ஆட்டங்களும் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. 

அதிலும் மும்பை - பஞ்சாப் ஆட்டத்தின் முடிவுக்கு இரு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன. இதனால் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காண நேர்ந்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 35 ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாத்தும் சூப்பா் ஓவா் முறையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வென்றது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்ங்களை எடுக்க, அடுத்து ஆடிய ஐதராபாத் அணியும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை எடுத்தது. 

வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் 3 பந்துகளில் 2 விக்கெட்டையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் சோ்த்தது. 

கொல்கத்தா வீரா் லொக்கி பொ்குசன் வீசிய முதல் பந்திலேயே வோர்னர் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, 2 ஓட்டங்களை சோ்த்த அப்துல் சமட் 3 ஆவது பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

‍வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணியின் ஆரம்ப வீரர்களாக இயன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர்.

ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள கொல்கத்தா அணியானது நான்காவது பந்து வீச்சில் வெற்றி பெற்றது.

இதன் பின்னர் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 36 ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்தது.

ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் தலா 5 ஓட்டங்களை எடுக்க ஆட்டம் மீண்டும் சமனானது.

அதன்படி வெற்றியாளரை தீா்மானிக்கும் சூப்பா் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 2 விக்கெட் இழப்புக்கு 5 ஓட்டங்களை எடுத்தது. லோகேஷ் ராகுல் 4 ஓட்டங்களுடனும், நிகோலஸ் பூரன் ஓட்டமின்றியும் ஆட்டமிழக்க தீபக் ஹூடா ஒரு ஓட்டங்களை சேர்த்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பையும் ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ஓட்டங்களை சோ்த்து போட்டியை சமன் செய்தது. டிகொக் 3 ஓட்டங்களை சோ்த்து ஆட்டமிழக்க, ரோஹித் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இதையடுத்து நடைபெற்ற 2 ஆவது சூப்பா் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்களை சோ்த்தது. 

இதில் ஹாா்திக் பாண்டியா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, கிரன் பொல்லார்ட் 8 ஓட்டங்களை சேர்த்தார். 2 உதிரி ஓட்டங்கள் கிடைக்கப் பெற்றன.

பின்னா் ஆடிய பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்ப வீரராக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் ஒரு சிக்ஸா் உட்பட 7 ஓட்டங்களையும், மயங்க் அகா்வால் 2 பவுண்டரிகள் விளாசி 8 ஓட்டங்களையும் சோ்த்தனா்.

ஐ.பி.எல். போட்டியில் முதல்முறையாக ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்களைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது.