( எம்.எப்.எம்.பஸீர்)

அடிப்படைவாதம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த அறிக்கைகளுக்கு அமைய, அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க தாம் தேவையான ஆலோசனை மற்றும் உத்தரவை வழங்கியமைக்கான எழுத்து மூல ஆதாரங்கள் தன் கைவசம் இல்லாத போதும்,  அது சார்ந்த  கலந்துரையாடல்களுடன் தொடர்புடைய ஆவணம் ஜனாதிபதி செயலகத்தில் இருக்கலாம் என  தாம் ஊகிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்று வருகின்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில்  நேற்று முன் தினம் 3 ஆவது நாளாக சுமார் 4 மணி நேரம் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் சாட்சியங்களை வழங்கினார்.

சாட்சி விசாரணைகளின் இடையே, தாக்குதலை தொடர்ந்து ஜனாதிபதி  உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொடவின் தலைமையில் நியமித்த மூவர் கொண்ட விசாரணை குழு தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.

இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்கு தாம் நியமித்த மலல்கொட குழுவின் அறிக்கையை மாற்ற முடியும் என தாம் கூறியதாக ஆணைக் குழு முன்னிலையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்  வழங்கிய சாட்சியத்தை  நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

' உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அவ்வாறு மாற்றும் அளவிற்கு  நான்  முட்டாள்தனமான நிலைக்கு வீழ்ச்சியடையவில்லை.

அந்த விசாரணை குழு நியமிக்கப்படுகையில் அது தொடர்பான விடயங்களை, அப்போதைய ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவே முன்னெடுத்தார். அதில் நான் எந்த தலையீடுகளையும் செய்யவில்லை. ' என இது தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சாட்சியமளித்தார்.

இதன்போது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையிலும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்ற வகையிலும் நீங்கள் பிறப்பித்த உத்தரவு மற்றும் அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டதா?  என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன வினவினார்.

அதற்கு பதிலலித்த மைத்திரிபால சிறிசேன, ' நான் தேவையான ஆலோசனைகளையும்  உத்தரவுகளையும் வழங்கியிருந்த போதிலும், கீழ் நிலை பதவிகளிலுள்ள அதிகாரிகள் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை' என்றார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா: அப்படியானால்  அவை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்து, முறையான தெளிவுபடுத்தல்கள் இடம்பெறவில்லை எனத் தென்படுகின்றதா?.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நான் உரியவாறு அறிவுறுத்தினேன். கீழ் நிலை பதவிகளிலுள்ள அதிகாரிகள் அவற்றை நடைமுறைப்படுத்தாத பிரச்சினையுள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இவ்வாறான நிலைமையை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டிருக்காது. அடிப்படைவாதம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த அறிக்கைகளுக்கு அமைய, அதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க நான் தேவையான ஆலோசனை மற்றும் உத்தரவை வழங்கியமைக்கான எழுத்து மூல ஆதாரங்கள் என்  கைவசம் இல்லாத போதும்,  அது சார்ந்த  கலந்துரையாடல்களுடன் தொடர்புடைய ஆவணம் ஜனாதிபதி செயலகத்தில் இருக்கலாம்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு : அப்படியானால் ஜனாதிபதி என்ற வகையில் உங்கள் ஆட்சிக்காலத்தில் நிலவிய நெருக்கடியான அரசியல் சூழலுக்கமைய, உரிய ஆலோசனை கிடைக்காமையால், கடும்போக்குவாதிகளால் குண்டுத் தாக்குதல் நடத்த முடிந்தது எனக் கூறினால் அது சரியானதா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: அப்போது அரசியல் நெருக்கடி காணப்படவில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் மீண்டும் ஆட்சியை முன்னெடுத்தோம். அரசியல் கருத்து முரண்பாடு காணப்பட்டாலும், அமைச்சு, நிறுவனங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை. அவ்வாறு அழுத்தம் விடுக்கப்பட்டதென நான் நம்பவில்லை. ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை கூடியது. பாதுகாப்பு அமைச்சின் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பல்வேறு குழுக்கள் உள்ளன. இதன்போது கலந்துரையாடப்படும். தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றோம். இங்கு வேறு விடயம் இடம்பெற்றுள்ளது. நான்கு வருடங்களாக, பாதுகாப்புப் பேரவை ஆலோசனை மற்றும் உத்தரவை வழங்கியுள்ளது. நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 புலனாய்வுப் பிரிவுகளிடையே, பாரிய புலனாய்வுப் பிரிவு இராணுவத்திலேயே உள்ளது. வடக்கு கிழக்கில் கடற்படை புலனாய்வுப் பிரிவு மிகவும் பலமாகக் காணப்பட்டது. எனினும், இதுகுறித்து அந்தப் பிரிவுகளிடமிருந்து அறிக்கைகள் கிடைக்கவில்லை.  வவுணதீவு  பொலிஸ் அதிகாரிகளின் கொலை புலிகளின் வேலை என்ற வகையில் கூறினர். பின்னரே, சஹ்ரானின் குழுவினரிடமிருந்து அந்த அதிகாரிகளின் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா: நீங்கள் என்ன விளக்கத்தை கூறினாலும், இந்த ஆணைக் குழுவுக்கு கிடைத்துள்ள சாட்சியங்கள் பிரகாரம், அடிப்படைவாதம் தொடர்பில் பாதுகாப்பு பேரவை உரிய அவதானம் செலுத்தாமையும், அடிப்படைவாதத்தை  கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உரிய வகையில் மேற்பார்வை செய்யாமையுமே ஏப்ரல் 21 தாக்குதல்கள் நடாத்தப்பட ஏதுவானது  என கூறினால், அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: அந்த சாட்சியங்களை நான் நிராகரிக்கின்றேன். 2019 ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் பாதுகாப்பு பேரவை கூட்டங்கள் நடந்தன.  அதற்கு முன்னைய வருடமும் அக்கூட்டங்கள் இடம்பெற்றன. நான் தேவையான ஆலோசனைகளை வழங்கியிருந்தேன். அவை நடை முறைப்படுத்தப்படாமையே பிரச்சினை. விசாரணை அதிகாரிகள் அதனை செய்யாவிட்டால், அவ்வாறு அவர்கள் செய்யாமை ஏன் என்ற சந்தேகம் உள்ளது. 

 2019 ஏபரல் 16 ஆம் திகதி கிழக்கில் மோட்டார் சைக்கிள் குண்டு வைத்து வெடிக்கச் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பில் சரியாக விசாரணை செய்ய ஜனாதிபதியின் ஆலோசனை  தேவை இல்லை. உரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருக்க வேண்டும்.  அந்த பகுதிகளிலும் உளவுப் பிரிவினர் உள்ளனர். அவர்கள் என்ன செய்தார்கள் என்ற சந்தேகம் உள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா:  மத அடிப்படைவாதங்களுக்கு எதிராக உரிய விசாரணைகளை செய்யாமை,  உளவுத் துறை அறிக்கைகள் மீது உரிய அவதானம் செலுத்தாமை,  எடுக்க வேண்டிய சரியான முடிவுகளை எடுக்காமை, காரணமாக அடிப்படைவாதம் தலை தூக்கி ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்ப்ட்டு, உங்கள் நாட்டின் அப்பாவி மக்களை பலி எடுத்துள்ளது அல்லவா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: அதனை நான் நிராகரிக்கின்றேன்.  அடிப்படைவாதத்தை ஒழிப்பது தொடர்பில் பாதுகாப்பு பேரவையில் மட்டுமல்லாமல் நான் திறந்த சபைகளிலும் கதைத்துள்ளேன்.  பாதுகாப்பு பேரவை நடவடிக்கை எடுக்க முடியாது. எனினும் தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் அங்கிருந்து கொடுக்கப்பட்டுள்ளன.  அதற்கு அப்பால் பிராந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அவர்களின் பொறுப்பு.' என்றார்.

 இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சாட்சியம் நிறைவு செய்யப்பட்ட நியையில், அவரது சாட்சியங்கள் தொடர்பில் குறுக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் முதலில் முன்னாள்  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரனி அனுர மெத்தகொடவினால் குறுக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.