"அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரியே இருக்கின்றனர். ஆறுகள் இல்லாத போதிலும் பாலங்கள் கட்டித்தருவதாக  வாக்குறுதியளிக்கின்றனர்"

–நிக்கிட்டா குருச்சேவ்

-சிவலிங்கம் சிவகுமாரன்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் கடவுனு பொருந்துவ. அது சிங்களத் திரைப்படமாக அமைந்தது. அதை தமிழில் முறிந்து போன வாக்குறுதிகள் என்று கூறலாம். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்  ஏமாற்றப்பட்டாலோ  அல்லது  கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது போனாலோ    பெரும்பான்மையினத்தவர்கள் இந்த திரைப்படத்தை  ஹாஸ்யத்துக்கு உதாரணங்காட்டுவர்.  

அதே போன்று  தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது பல்வேறு சந்தர்ப்பங்களில்  வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை  சராசரி அரசியல்வாதிகள் என்று சிலர் அடையாளப்படுத்துவர். நேர்மையான முறையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒருவர் அதிலிருந்து சற்று விலகிச்சென்றாலே சராசரி அரசியல்வாதியாகி விடுகின்றார். இலங்கையில் இப்போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களையடுத்து நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூட சராசரி அரசியல்வாதிகள் என்ற வட்டத்துக்குள் வந்து விட்டனரோ என்று யோசிக்க தோன்றுகிறது. 

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் ஊதிய விவகாரத்தில் நாட்டின் உயர் அதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவருமே கடந்த பல மாதங்களாக அது பற்றி வாய் திறக்கவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கம்பனிகளுக்கு வழங்கிய இரண்டு வார கால அவகாசம் முடிவுக்கு வந்துள்ளது. தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளைப்பெற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் 8 தமிழ் உறுப்பினர்களும் அது பற்றி பேசுவதில்லை.  

ஏற்றுமதி உற்பத்திகள்  மூலம் நாட்டுக்குக் கிடைத்து வரும் வருமானத்தை புள்ளி விபரங்களாக காட்டுவதோடு அரசாங்கத்தின் பணி முடிவடைந்து விடுகின்றது. அதைப் பெற்றுத்தருபவர்கள் என்ன நிலைமையில் இருக்கின்றார்கள் என்பது பற்றி எந்த தேடல்களும் இல்லை. 

2019 இல் அந்நிய செலாவணி

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்றுமதி உற்பத்திகள்  மூலம் இலங்கை பெற்றுக்கொண்ட வருமானம்  16.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஆடை ஏற்றுமதியே அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுத்த துறையாக உள்ளது.  தற்காலத்தில் ஆடைத் தொழிற்றுறையில் ஒரு ஊழியர் மாதாந்தம் பெறும் வருமானம் சராசரியாக 34 ஆயிரம் ரூபாயாகும். நாளொன்றுக்கு சராசரியாக 2900 ரூபாயாக அது விளங்குகிறது. 

அதே வேளை அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுத்த  இரண்டாவது உற்பத்தி பொருளாக தேயிலை உள்ளது.   அவ்வாண்டு உலக சந்தைக்கு இலங்கையானது, 300 மில்லியன் கிலோ கிராமுக்கு அதிகமான தேயிலையை ஏற்றுமதி செய்திருந்ததோடு வருமானமாக 1.24 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றிருந்தது. 

ஆனால் இன்று ஒரு தோட்டத்தொழிலாளி பெறும் நாளாந்த சம்பளம் 750 ரூபாவாகும். மாதத்துக்கு இவர்களுக்கு 20 நாட்கள் வேலை வழங்குவதை மிகப்பெரிய சாதனையாக கூறுகின்றன கம்பனிகள். 

Tea plantation workers need a global strategy - World Socialist Web Site

தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் . அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். அதற்கு முன்பதாகவே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதிகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை. 

தந்தை தாய் மற்றும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட ஒரு தொழிலாளர் குடும்பத்திற்கு இரண்டு வேளை உணவுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 1200 ரூபா தேவைப்படுகின்றது. அப்படியென்றால் மாதமொன்றுக்கு 36 ஆயிரம் ரூபா வருமானம் அவர்களுக்குத் தேவை. எனினும் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் வேலை செய்தும் தற்போதைய சூழ்நிலையில் மாதமொன்றுக்கு 33 ஆயிரம் ரூபாவுக்குக் குறைவான வருமானத்தையே அவர்கள் பெறுகின்றனர். போஷாக்கான உணவுகளுக்கே வருமானம் போதாமலுள்ள போது ஏனைய விடயங்களுக்கு அவர்களால் எங்ஙனம் முகங்கொடுக்க முடியும்? 

5 வயதுக்குக் குறைவான பெருந்தோட்டப்பகுதி வாழ் சிறுவர்களில் 40 வீதமானோர் போஷாக்கு குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற யுனிசெப் அமைப்பின் ஆய்வை புறந்தள்ளவே முடியாது. இந்த ஆய்வுகள் எல்லாமே தேசிய மட்டத்தில் புள்ளி விபரங்களாகவே உள்ளன. அல்லது ஊடகங்களுக்கு செய்திகளாக இருக்கின்றன. கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகளுக்கு பேசு பொருளாக விளங்குகின்றன. இவை அனைத்தையும் செவி மடுத்துக்கொண்டு மெளனமாக இருக்கின்றது அரசாங்கம். அதை விட கடுமையான மெளனத்தை தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடைப்பிடிக்கின்றனர். 

 இது நாள் வரை தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் எந்த வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. அதே வேளை தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக இந்த தொழிற்சங்கங்கள் வருடந்தோறும் பெற்று வரும் வருமானத்தை ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.  அதற்கான கணக்கு வழக்குகளை இதுவரை எந்த தொழிற்சங்கமும் காட்டவில்லை. 

தகவல்களுக்கு அமைய 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து 2017 மார்ச் 30 வரை தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சந்தா தொகை  77 மில்லியன்களாகும்.  இந்த விபரங்களையும் கடந்த தான் அனைவரும் போய்க் கொண்டிருக்கின்றார்கள். இது வரை தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து சந்தாவை நிறுத்துவது பற்றி எந்தவிதமான உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ஆயிரம் ரூபா நாட் சம்பளத்துக்கு   இன்னும் 250 ரூபாவையே தொழிலாளர்களுக்கு அதிகரிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தொழிலாளியும் தனது அடிப்படை சம்பளத்தில் மூன்றிலொரு பங்கை (233 ரூபாய்) தொழிற்சங்கங்களுக்கு மாதந்தோறும் வழங்கிக்கொண்டிருக்கின்றனர். 

தொழிற்சங்கங்கள் இவர்களுக்கு ஊதியத்தைப் பெற்றுக்கொடுப்பதை விட சந்தாவை பெற்றுக்கொள்வதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றன. சராசரி அரசியல்வாதிகளுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் இப்போது என்ன தான் வேறுபாடு உள்ளது? 

   தேயிலை ஏற்றுமதி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானத்தை வைத்து பார்க்கும் போது தோட்டங்கள் இன்னும் நட்டத்தில் இயங்குவதாக கம்பனிகள் கூறுவதை அரசாங்கம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்போகின்றது?   ஆறுகளே இல்லாத இடத்தில் பாலங்கள் கட்டித்தருகிறோம் என்று கூறும் அரசியல்வாதிகள் ஆறுகள் இருக்குமிடத்தில் அணையை கட்டித்தருகிறோம் என்று கூறுவார்களோ? வாக்குறுதியை காப்பாற்றாதவர்களையும்   பொய் கூறும் அல்லது ஏமாற்றுபவர்களை  சராசரி அரசியல்வாதிகள் என விளிப்பதில் தவறில்லை. ஆனால் தொடர்ந்தும் ஒரே வாக்குறுதியை ஒவ்வொரு தேர்தலுக்கும்  கூறிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று அழைப்பது? 

மலையகத்துக்கு  பல்கலைக்கழகம் அவசியம் தான். ஆனால் அங்கு செல்வதற்கு  உடுத்த உடையும் படிப்பதற்கு போஷாக்குணவும் கூட அவசியம். மீளாய்வு செய்து கைச்சாத்திட வேண்டிய பொதுக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 17 வருடங்கள் ஆகின்றன. தொடர்ச்சியாக சம்பள கூட்டு ஒப்பந்தம் மட்டுமே பல இழுபறிகளுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்டு வருகின்றது. இனி அதுவும் எதிர்காலத்தில் இல்லாமல் போகும் ஆபத்துக்கள் அதிகரித்து விட்டன. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கோரிக்கைகளையே கணக்கிலெடுக்காத கம்பனிகள் சந்தா வாங்கிக்கொண்டு கடந்த போகும் தொழிற்சங்கங்களையா கண்டு கொள்ளப்போகின்றன? சராசரி அரசியல்வாதிகளாக அவர்களும் மாறிப்போய் பல ஆண்டுகளாகின்றன.