-ஆர்.ராம்-

2018ஆம் ஆண்டு, மார்ச் 28ஆம் திகதி, இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை  புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள்  ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரனை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து, இலங்கை தீவில் காணப்படுகின்ற வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிகள், பூகோள அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோது, 'இலங்கையில் அடுத்து வரும் வருடங்களில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான உக்கிரமடைந்த பலப்பரீட்சை தொடரப்போகின்றது' என்ற கருத்தை முன்வைத்திருந்தார். 

அக்காலத்தில், ஜனாதிபதி சிறிசேன - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டு அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்தக் கூட்டரசு சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99வருட குத்தகைக்கு வழங்கியிருந்தது. மறுபக்கத்தில் கொழும்பு துறைமுக நகருக்கான நிர்மாணப்பணிகளுக்கான மீள் அனுமதியையும் வழங்கியிருந்தது. 

இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான மெய்நிகர் உச்சிமாநாடு 27-09-2020 அன்று இடம்பெற்றது.

இந்தியாவுக்குச் உத்தியோக பூர்வ விஜயம் செய்;த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவுக்கு வழங்கும் தீர்மானம் தொடர்பில் இந்திய இராஜதந்திர ஆலோசகர்களால் வினவப்பட்ட போது 'இந்தியா 32கிலோமீற்றரில் உள்ளது, சீனா 3500 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் இருக்கின்றது' என்று சர்வ சாதாரணமாக பதிலளித்திருந்தார். 

இவ்விதமாக மைத்திரிபால சிறிசேனவின் 'விடயங்களில்லா விஜயங்களும்', ரணில் விக்கிரமசிங்கவின் 'சர்வசாதாரண அணுகுமுறைகளும்',  நிச்சயமாக இந்தியாவுக்கு 'பிடித்தமில்லாத செயல்களாகவே இருக்கும்' அதன் வெளிப்பாடாகத் தான் கேர்ணல்.ஆர்.ஹரிகரன் மூன்று நாடுகளின் பலப்பரீட்சை தளமாக இலங்கை இருக்கப்போகின்றது என்று கூறுகின்றார் என்றும் சிந்திக்க தூண்டியது. ஆனால், தற்போது அவருடைய ஆரூடக்கருத்துக்கள் செயல் வடிமாவதை உணரக்கூடியதாக இருக்கின்றது. 

அமெரிக்க இராஜாங்க செயலார் மைக் பொம்பியோ , இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் ரொஷpமிட்சு மொட்டேகி மற்றும் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மெறிஸ் பேனே ஆகியோர் பங்கேற்ற நான்கு நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல்: வெளியுறவு அமைச்சர்கள் மட்ட இரண்டாவது மாநாடு  'குவாட்'  (Quadrilateral  Security  Dialogue – Quad) 06-10-2020 அன்று டோக்கியோவில் நடைபெற்றது.  

மைத்திரி ரணில் கூட்டு அரசின் அத்தனை செயற்பாடுகளையும் விமர்சித்து முன்னெடுத்த பிரசாரங்களினால் வெற்றி கண்ட ராஜபக்ஷ தரப்பு ஆட்சிப்பீடமேறியது. கடந்த அரசாங்கத்தினை விமர்சித்த விடயங்களில் முக்கியமானதாக காணப்படும் நாட்டின் 'வெளிவிவகார கொள்கை' தொடர்பில் கவனம் கொண்டது. 

வெளிவிவகார கொள்கை தொடர்பிலான நிலைப்பாடுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. சகோதரர்கள் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இருந்தாலும், கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியபோது அவை நாடு சார்ந்ததாக இல்லாது நபர்கள் சார்ந்ததாக காணப்பட்டன. அந்த நிலைமை இருவரிடத்தில் உள்ள இடைவெளிகளை புடம்போட்டு காண்பித்துள்ளது. 

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிப்பீடமேறிய எந்த அரசுகளும் தமது இருப்புக்காக பிராந்திய, சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை பேணுவதில் ஏற்ற இறக்கங்களை காண்பித்தே வந்திருக்கின்றன. ஆனாலும் 'அணிசேராக் கொள்கையை' அடியொற்றிய வெளிவிவகார கொள்கையையே பின்பற்றுகின்றோம் என்ற சுலோகத்தை ஒருபோதும் கைவிட்டிருக்கவில்லை.

சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் சபை உறுப்பினர் மற்றும் சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் அலுவலக பணிப்பாளர் யங் ஜியேஷp தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக் குழு ஜனாதிபதி கோட்டாவுடன் 09-10-2020 அன்று சந்தித்தது.

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும், பிரதமர் மஹிந்தவுக்கும் இடையிலேயே வெளியுறவுக்கொள்கை தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய, 'நடுநிலையான' வெளிவிவகார கொள்கை என்பதை முன்வைத்திருக்கின்றார். 

பிரதமர் மஹிந்த 'அணிசோராக்' கொள்கையை முன்வைத்துள்ளதோடு இந்தியா, சீனா தொடர்பிலான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். 

அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் தினேஷ; குணவர்த்தன, இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, செயலாளர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் ஜனாதிபதியையும், பிரதமரையும் பகைத்துவிடக்கூடாது என்பதற்காக 'நடுநிலையுடனான அணிசேராக் கொள்கை' என்ற புதிய கொள்கைப் படைப்பொன்றை வெளியிட்டிருக்கின்றார்கள்.

வெளிவிவகார செயலாளர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, ஒரு சந்தர்ப்பத்தில் 'இந்தியாவுக்கே முதலிடம்' என்று பகிரங்கமாக கூறுகிறார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையை 'சர்வதேச நாடுகளின் உதைபந்தாட்ட களமாக இருக்க இடமளிக்க முடியாது' என்று கழுவும் மீனில் நழுவும் மீனாகிவிட்டார். 

இந்நிலையில், இலங்கையின் வெளிவிவகார கொள்கை, நடுநிலை அடிப்படையிலானதா, அணிசேராத நிலைப்பாடுடனானதா, இந்தியாவுக்கு முதன்மை தானத்தினை வழங்குவதா, சீன சார்பானதா என்று அடுக்காக கேள்விகள் எழுகின்றன. 

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் 15-10-2020 அன்று அலரிமாளிகையில் விசேட சந்திப்பில் ஈடுபட்டார்.  

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும் அரசியல் விமர்சகருமான கலாநிதி.தயான் ஜயதிலக்க, நீண்டகாலம் பின்பற்றிய 'அணிசேராக் கொள்கை' எவ்வாறு 'நடுநிலை கொள்கை' என்று பரிநமித்தது என்ற கேள்வியை தொடுத்திருக்கின்றார். அதுமட்டுமன்றி, ராஜபக்ஷவினரின் ஆட்சியானது, வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றுவதில் தவறான அணுகுமுறைகளால் 'நடுநிலை' தவறி விட்டது என்றும் சுட்டிக்காட்டிருக்கின்றார் 

தற்போதைய நிலையில் நாட்டின் வெளிவிவகார கொள்கை குறித்து முன்னுக்குப் பின் முரணான வகையிலான வெளிப்பாடுகளே ஆளும் தரப்பிடமிருந்து கிடைக்கின்றன. இதனால் நாட்டின் வெளிவிவகார கொள்கை, நபர்களுக்கு ஏற்ப நெகிழக்கூடியதாகவும், அடிப்படை அற்றதாகவும், தளம்பலடைந்திருக்கின்றது.

இவ்விதமான வெளிவிவகார கொள்கையை மறுசீரமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ஆரம்பத்தில் உறுதியாக இருந்திருக்கின்றார். அதற்காக மிலிந்த மொறகொடவினால் இயக்கப்படும் பாத் பைன்டர் அமைப்பில் கொலம்பகே பணியாற்றியபோது வெளிவிவகார கொள்கை வரைபொன்று செய்யபட்டு அது ஜனாதிபதி கோட்டாபயவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. 

"இலங்கை ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. எனவே எமது நாடு பல தரப்பினரையும் ஈர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கை 'நடுநிலைமையான' வெளிநாட்டுக் கொள்கையை தெரிவு செய்துள்ளது. பரஸ்பர நன்மையுடன் கூடிய அபிவிருத்தி ஒத்துழைப்பு அதற்கே எமது முன்னுரிமையாகும். இந்நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்ததாகும். ஆகவே வெளிநாடுகளுக்கான உறவுகள் தொடர்பாக இலங்கை முற்றிலும் புதிய செயற்பாடுகளை வகுத்து அவற்றை முறையாகப் பின்பற்றும்"

-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

அந்த பரிந்துரை எந்த கோட்பாட்டை அடியொற்றியது என்பது தற்போது வரையில் வெளிப்படுத்தப்படவில்லை. அத்தகையதொரு சூழலில் ஜனாதிபதி கோட்டபாய அந்தப் பரிந்துரையை தற்போது சீர்தூக்கிப் பார்ப்பாரா என்பது சந்தேகம் தான்.

இந்தப் பின்னணியில், எம்.சி.சி.ஒப்பந்தம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான மறுதலிப்புக்களும், எதிர்மறையான பிரதிபலிப்புகளும் அமெரிக்காவுடனான உறவில் 'நெருடலை' ஏற்படுத்தியிருக்கின்றது. 

எம்.சி.சி.ஒப்பந்தத்தினை அரசியல் மயப்படுத்தியமை வெட்கக்கேடானது என்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லஸின் கருத்து அந்த நெருடலின் அதியுச்ச வெளிப்பாடொன்றே. 

அதுமட்டுமன்றி, அமெரிக்க தூதுவர், இலங்கை, சீனா உறவு தொடர்பில் நேரடியாகவே கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அந்தக்கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு சொற்ப நேரத்திற்குள்ளேயே இலங்கைக்கான சீன தூதரகம் அமெரிக்க தூதுவர் இராஜதந்திர கொள்கைக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்றார் என்று பிரதிபலித்தது. 

இவ்வாறிருக்க, தற்போதைய ஆட்சியாளர்கள், இந்தியாவுடனும் 'உரசலை' ஆரம்பித்திருக்கின்றனர். திருகோணமலையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறுதல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை வழங்காது இழுத்தடித்தல், இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மேலெழுந்துள்ள அலை ஆகியவற்றால் ராஜபக்ஷவினர் தொடர்பில் புதுடெல்லி 'கனத்த' மனநிலையை எட்டியிருக்கின்றது. 

"அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, வியாபார மற்றும் கலாசார விடயங்களில் இலங்கை சர்வதேச நாடுகளுடன் நட்புறவு ரீதியான தொடர்புகளை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதோடு அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் நாடுகளுடனான உறவுகள் முன்னெடுத்துச் செல்லப்படும். இந்தியா எமது உறவு நாடு என்பதோடு சீனா எமது நட்பு நாடாகும்"

-பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அதன் வெளிப்பாடாகவே இலகுவாக வளைந்து கொடுப்பார் என்று நம்பும் பிரதமர் மஹிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்தார். 'சொல்ல வேண்டியதை' பகிரங்மாகச் சென்னார்.

ஆனாலும் அதன் 'விளைவு' பயனற்றே இருக்கின்றது. இந்தியாவுடனான இராஜதந்திர கலந்துரையாடல்களின் போது தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை 'மறதி' என்ற வார்த்தையை பயன்படுத்தி சாணக்கியமாக தகர்த்து விட்டு தப்பிக் கொண்டுள்ளார் பிரதமர் மஹிந்த. 

அதேநேரம், பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற விடயங்களில் அதீத அக்கறை காட்டும் நாடான ஜப்பானுடனும் ஆட்சியாளர்கள் முரண்பட்டு நிற்கின்றனர். ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தினால் 2019 ஜுலை 2இல் ஆரம்பிக்கப்பட்ட 'மாலபே -கொழும்பு இலகு ரயில் திட்டத்துக்கு' இடைநடுவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

பொதுப்படையில் 'பொருத்தமில்லாத திட்டம்' என்று ராஜபக்ஷ அரசாங்கம் அதனை விமர்சித்தாலும், ஜப்பானிடத்தில் அரசாங்கம் கோரிய 'கொழும்பு நிலக்கீழ் மின்சாரக் கம்பிகள் திட்டத்தின்' பதிலடியே பின்னணியில் இருப்பதாக தகவல்கள் உள்ளன.

ஆக, ராஜபக்ஷ சகோதரர்களின் அரசாங்கம் ஏக நேரத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஏறக்குறைய பகிரங்கமாகவே முட்டிக் கொண்டுள்ளது. இவ்வாறு மூன்று நாடுகளை ஒரே தருணத்தில் முட்டிக்கொள்வதற்கான 'சக்தி' அரசாங்கத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்விகள் இங்கு எழுக்கின்றன. 

இலங்கைத் தீவுக்கு வெளியே, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகியவற்றுடன் அவுஸ்திரேலியாவும் கூட்டுச் செயற்பாட்டில் சங்கமித்துள்ளன. அதாவது, தென்சீனக்கடல், இந்து சமுத்திர பிராந்தியம் என்று சீனா அகலக்கால் வைத்து வரும் நிலையிலேயே நாற்கர கூட்டு தோற்றம் பெற்றுள்ளது. 

"தற்போதைய அரசாங்கம் சகல நாடுகளுடனும் சமமான அடிப்படையிலேயே இருதரப்பு உறவுகளை பேணி வருகின்றது. அதனடிப்படையில் இலங்கையானது உலக சமூகங்கள் இடையே நண்பர்களைக் கொண்டிருக்குமே தவிர பகைவர்களை கொண்டிருக்காது.  ஆகவே இலங்கை முற்றிலும் அணிசேராத  வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் வெளிநாட்டு உறவுகளில் மிகவும் முக்கிய அடிப்படையாகும்”

-வெளிவிவகார அமைச்சர் தினேஷ; குணவர்த்தன

 

அதுமட்டுமன்றி, இந்த நாற்கர கூட்டான 'குவாட்டை' பயன்படுத் 'ஆசிய நேட்டோவை' உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா இருக்கின்றது. டோக்கியோவில் நடைபெற்ற இரண்டாவது குவாட் மாநாடு முழுமையாக வெற்றிபெறாது விட்டாலும் 'கூட்டான செயற்பாட்டிற்கு' ஒருபடி வலுவூட்டலை மேலதிகமாக வழங்கியிருக்கின்றது.

அத்துடன் மலைபார் பயிற்சிகளில் அவுஸ்திரேலியாவை இணைப்பதற்கும், அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கூட்டிணைந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குமான வலிமையான இணக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. 

தனது எல்லைக்கு வெளியே அமெரிக்க, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டிணைந்துள்ளதை அரசாங்கம் அறியாமல் அந்நாடுகளுடன் ஏக நேரத்தில் மோதிவிட்டதா? ஒருபோதும் இல்லை. ஏற்கனவே ஆட்சிப்பீடமேறிய அனுபவமும், போரின் பின்னர் கையிலெடுத்த 'சீன சார்பு' போக்கால் ஏற்பட்ட ஆட்சி பறிப்பையும் ராஜபக்ஷவினர் உணராதவர்கள் அல்லர்.  

அதுமட்டுமன்றி, இலங்கைத் தீவுக்கு வெளியில் இணங்கிச் செயற்டும் நான்கு நாடுகளில் ஏதாவது ஒன்றுடன் முரண்பட்டால்  'ஒன்றின் போர்வைக்குள் மற்றொன்று ஒளிந்திருந்து' செயற்பாடும் என்பதை அறியாதவர்களும் அல்லர் ராஜபக்ஷவினர். 

அதேசமயத்தில், சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் விவகாரம், பிரித்தானியாவில் உள்ள தூதரக பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ விவாகாரம் ஆகியவற்றால் அவ்விரு நாடுகளுடனும் சுமூகமான நிலைமை இல்லை. 

“வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டியதில்லை. பூகோள மாற்றத்திற்கு அமைவாக அவை இயல்பாகவே சிறுசிறு மாற்றம் காண்கின்றன. இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றலை தொடந்து கடைப்பிடிக்கும்” 

- பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய

இந்த நாடுகளும் இலங்கை அரசு முண்டிக்கொண்டுள்ள தரப்புக்களுடன் 'இணக்கமான' நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. இவ்விதமான எதிர்நிலையாளர்கள் ஒன்றாக கைகோர்க்கும் பட்சத்தில் நிலைமைகள் மென்மேலும் மோசமடைவதற்கே அதிக வாய்ப்புக்கள் உள்ளன.  

ஆட்சி அதிகாரத்தை சுவைத்த பட்டறிவுள்ள ராஜபக்ஷவினர் மீண்டும் சர்வதேச தரப்புக்களுடன் முட்டிமோத துணிகின்றார்கள் என்றால் அதன் பின்னணியில் நிச்சயமாக வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.  

அதனடிப்படையில் பார்க்கையில் ராஜபக்ஷவினருக்கு கடந்த இரு தேர்தல்களில் தென்னிலங்கை பெரும்பான்மையின மக்களின் ஆதரவுடன் பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம். 

அடுத்து, சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் வெளிவிவகார ஆணைக்குழு அலுவலக பணிப்பாளர் யங் ஜியேஷp தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவின் சந்திப்பின் போது, 'சர்வதேச ரீதியாக இலங்கையின் இறைமை பாதிக்கப்படாது பாதுகாப்பளிப்போம் என்ற உறுதி மொழி வழங்கியுள்ளதோடு பாரியளவிலான நிதி நன்கொடைகளையும் சீனா அறிவித்துள்ளது. 

இவை தான், தமக்கு சக்திவாய்ந்த தரப்புக்கள் சர்வதேச ரீதியாக பக்கபலமாக உள்ளன என்ற மனோதிடத்தினை ராஜபக்ஷவினரிடத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது. 

ராஜபக்ஷவினரைப் பொறுத்தவரையில் சர்வதேச ரீதியாக காணப்படும் தலையிடிகளுள் பிரதானமானது ஜெனீவா விவகாரமே. அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளுடன் முட்டுப்பட்டால் ஜெனீவாவில் நெருக்கடிகள் எழுவது நிச்சயம். 

அச்சமயத்தில் கைகொடுப்பதற்கு வலுவானதொரு சக்தி அவசியமாகின்றது. அந்த சக்தியாக 'தான்' இருப்பேன் என்பதை சீனா சொல்லாமல் சொல்லி விட்டது. அதேபோல மேற்குலக எதிர்ப்புவாத ரஷ;யாவும் 'கைகொடுக்கும்' என்பதையும் ராஜபக்ஷ தரப்பு உறுதி செய்திருக்கலாம்.  

 “இலங்கை ஒரு நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற விரும்புகிறது. ஆயினும் இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு நலன்களை பாதுகாக்கும் வகையில் ‘இந்தியாவுக்கே முதலிடம்’ என்ற அணுகுமுறை கொள்கையை பின்பற்றுகின்றது. இலங்கை இந்தியாவுக்கு ஓர் மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்க முடியாது. இலங்கை இந்தியாவிலிருந்து பயனடைய வேண்டும். பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தியாவிற்கே முன்னுரிமை. ஆனால் பொருளாதார செழிப்புக்காக இலங்கை ஏனைய நாடுகளுடன் நடுநிலையான உறவில் இருக்கும்” 

-வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே

சீனா, ரஷ;யா மீதான அதீத நம்பிக்கையும், மக்கள் ஆணையும் தமது நிகழ்ச்சி நிரலினை முன்னெடுப்பதற்கு உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி தடையாக இருக்கும் எவரையும் எதிர்ப்பதற்கான தற்துணிவை ராஜபக்ஷவினருக்கு வழங்கியிருக்கின்றது. 

ஆனால், ஆறில் ஐந்து பெரும்பான்மை கொண்டிருந்த ஜேர்.ஆர்.ஜெயவர்த்தன சிங்கள, பௌத்த சித்ததாந்தத்தை முன்னிலைப்படுத்தி கோலோச்சுவதற்காக 'எந்தப்பேயுடனும் கைகோர்ப்பேன்' என்று எகத்தாளமான பேசினார், செயற்பட்டார்.

அவ்விதமான போக்கிற்கு 1980களில் அமெரிக்க ஜனாதிபதி ரெனால்ட்  றீகன், தனது விசேட பிரதிநிதியாக ஜெனரல் வெர்னான் வால்டர்ஸை அனுப்பி 'இந்தியாவுடன பிரச்சினையை உடன் தீர்த்துக்கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தினார்.

பின்னரான காலத்தில் இந்திராகாந்தியின் விசேட பிரதிநிதியாக ஜி.பார்த்தசாரதி இலங்கைக்கு விரைந்து ஜே.ஆருடன் நேரடி பேச்சுக்களை முன்னெடுத்து நிலைமைகளை கையாண்டார். 

இந்த இரு நிகழ்வுகளும் பிராந்திய, சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் 'பிடி'யை காண்பிக்கும் வரலாற்று முன்னுதாரணங்களாக இருக்கின்றன. 

அப்படியிருக்க, நடுநிலைமை, அணிசேரா நிலை என்று முரண்நகை கொள்கைகளைப் பிரதிபலித்து, இடதுசாரித்துவ பிம்பத்துடன் உள்ள ஜனநாயக மறுதலிப்பு தரப்புக்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து அவற்றையே அடியொற்றிச் செல்ல முனைவது ஈற்றில் நாட்டின் 'இறைமை' மீதான கேள்வியை இயல்பாகவே ஏற்படுத்துவதற்கே வித்திடும்.