கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் வெகுவாக ஆடிப் போயுள்ளனர். வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய மாத்திரமே மக்கள் வெளியில் சென்றுவருகின்றனர் .

நாளாந்தம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து  நெருங்குகிறது.

இது  இன்னும் சமுக தொற்றாகவில்லை என்கிறார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.  மேலும் அவசர தேவைகளைத் தவிர வைத்தியசாலைக்கு  நோயாளர்களின் வருகை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மனம்போன போக்கில் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. 'ஊர்  முடக்கம்' ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் தெரிவிக்காத கருத்துக்களைக்கூட அவை பகிர்ந்து வருகின்றன.

ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி அங்கு நோய்தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 

இதனால் உண்மை எது? பொய் எது? என்று தெரியாத மக்கள் குழம்பிப் போயுள்ளனர். சமூக ஊடகங்களின்  தவறான தகவல்களை கட்டுப்படுத்தவும் உண்மை நிலைமையை வெளிப்படுத்தவும் வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சேர்ந்ததாகும்.

இதேபோல ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களைத் தவிர நாட்டில் வேறு பிரதேசங்கள் அதிக எச்சரிக்கைப்  பகுதிகளாக அடையாளப் படுத்தப்படவில்லை.

அவ்வாறு கூறப்படும் அளவுக்கு அதிக ஆபத்துக்கள் இருந்தால் நிச்சயம் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

அதேபோல ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்பத்தை கொரோனா வைரஸில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ள அவர் 'மேலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்க்கமான தினங்கள். எனவே, ஒவ்வொருவரும் தங்கள், தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்' என்றும் கூறியுள்ளார் .

இதனிடையே உடங்கு சட்டத்தை மீறியவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க தவறியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் விடயத்தை எவரும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

ஊடகங்களும் அரசாங்கமும், சுகாதாரத் துறையினரும் கொரோனா வைரஸ் பரவல், அதன் தாக்கம், அதிலிருந்தும் எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது என்று சதா கூறி வருகின்றன.

இருந்தும் அது பலருக்கு "செவிடன்காதில் ஊதிய சங்காகவே" உள்ளது. இதனால் குறித்த நபர் தன்னை மாத்திரமல்ல தான்சார்ந்த சமூகத்தையும் அபாயத்துக்கு இட்டுச் செல்கிறார் என்பதை  மறந்து போகக் கூடாது.

குறிப்பாக தோட்டங்கள்  ' சேறிப்புறங்கள் மற்றும்  நாட்டில் மக்கள் செறிந்து வாழும் தொடர் மாடி குடியிருப்புகள் பலவற்றில்  சுகாதார நடைமுறைகளை அங்கு வாழும் மக்கள் பின்பற்றப்படுவது வெகுவாக குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளில் கொரோனா தொற்றுயேற்படுமானால் குறித்த குடியிருப்புக்கள் மாத்திரமல்ல. அந்தப் பிரதேசமே முடக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் .

எனவே தொடர் மாடி வீடுகளில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் வேண்டியது  அவசியம். 

இந்த நோயின் அபாயம் கருதி மக்கள் ஒன்று பட்டால் மாத்திரமே நாம் இதனை முறியடிக்க முடியும்.  இன்றேல் அது நமது உயிரைக் குடித்துவிடும்.