சீனாவின் கிங்டாவோ துறைமுக நகரில் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் மீன் பொதியிடப்பட்ட உறைக்கு வெளியே உயிருள்ள புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை சீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

குளிரூட்டப்பட்ட உணவுப் பொதிக்கு வெளியே இவ்வாறு உயிருள்ள கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, வேறுபடுத்தப்பட்டமை உலகில் இதுவே முதல் சந்தர்ப்பம் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிங்டாவோ நகரில் அண்மையில் புதிய கொவிட்-19 கொத்தணி கண்டறியப்பட்டதையடுத்து அங்கு வாழும் சுமார் 11 மில்லியன் மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

எனினும் இதன் பின்னர் புதிதாக எவருக்கு தொற்று கண்டறியப்படவில்லை. 

கடந்த ஜூலையில் இறக்குமதி செய்யப்பட்ட உறைந் இறால் பொதியைக் கொண்ட கொள்கலனின் உட்புறமாக வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, குறித்த இறக்குமதியினை சீனா இடைநிறுத்தியிருந்தது.

இந் நிலையில் தற்போது கண்டறியப்பட்டு வேறுபடுத்தப்பட்டுள்ள உயிருள்ள கொரோனா வைரஸ் கிங்டாவோவில் இறக்குமதி செய்யப்பட்ட மீன் வகையொன்றின் பொதியில் வெளிப் புறமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த நகரில் புதிதாக தொற்று ஏற்பட்டமை தொடர்பான விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இது உயிருள்ள கொரோனா வைரஸை கொண்டுள்ள பொதிகளுடன் தொடர்புபடுவதன் மூலமும் கொரோனா வைரஸ் தொற்றலாம் என்பதை சீன அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் குறித்த கடலுணவு எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.