வடகிழக்கு நைஜீரியாவின் முக்கிய நகரத்திற்கு அருகிலுள்ள இராணுவத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 நைஜீரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலை இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புடைய ஜிஹாதிகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி போகோ ஹராம் குழுவைச் சேர்ந்த போராளிகள் வெள்ளிக்கிழமை மாலை ஜக்கானாவில் உள்ள தளத்தைத் தாக்கி, இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலம் கையெறி குண்டுகளை வீசியதாக இரு ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த தாக்குதலில் இராணுவ கட்டளை அதிகாரி உட்பட மொத்தம் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும பல வீரர்கள் காணாமல் போயுமுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது போகோ ஹராமினரால் பிடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது. 

இந்த நடவடிக்கையில் இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட நான்கு லொறிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

வடகிழக்கு நைஜீரியாவில் தசாப்தங்களாக நீடித்த இஸ்லாமிய மோதலில் குறைந்தது 36,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.