(ஆர்.ராம்)

20ஐ மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றும் வகையில் குழு நிலையில் திருத்தங்கள் செய்யப்படும் -அடுத்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை நிறைவு செய்யத்திட்டம்

20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் நோக்கமிலலை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக 20ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படும் சர்ஜனவாக்கெடுப்புக்குரியதான விடயங்களை பாராளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது திருத்தங்களைச் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

20ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 20ஆம் திகதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அதனையடுத்து 21 மற்றும் 22ஆம் திகதிகளில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை பாராளுமன்ற விவாதத்தை நடத்தப்பட்டு 22ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்ரூபவ் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாக வீரகேசரி வாரவெளியீட்டிடம் கருத்து வெளியிடுகையிலேயே நீதி அமைச்சர் அலிசப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , 20ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தினை பாராளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளது. உயர் மன்றத்தின் தீர்மானங்கள் எவ்விதமாக இருக்கின்றன என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் உத்தியேக பூர்வமான அறிவிப்புக்கு பின்னர் உயர் நீதிமன்ற தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடி ஆராயவுள்ளது.

குறிப்பாக, சர்ஜனவாக்கெடுப்புக்கு செல்லவேண்டிய விடயதானங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதோடு அவை தொடர்பாக குழுநிலை விவாதத்தின் போது உரிய திருத்தங்களை செய்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதற்குரிய தயார்ப்படுத்தல்களை பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் மேற்கொள்ளவுள்வோம்.

எவ்வாறாயினும், 20ஆவது திருத்தமானது தற்போதைய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக மாற்றமாகும். அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக ஆட்சி அதிகாரங்கள் தொடர்பாக 19ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படும் குழப்ப நிலையை போக்குவதற்கான உடனடி நடவடிக்கையே 20ஆவது திருத்தமாகும். 

ஆகவே 20ஆவது திருத்தத்தினை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்வதற்கான முனைப்பு அரசாங்கத்திடத்தில் இல்லை.

அதேநேரம், அரசாங்கத்திற்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை உள்ளது. அதற்கு அமைவாக புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்தக்குழுவானதுரூபவ் அடுத்துவரும் ஆறுமாத காலத்திற்குள் உத்தேச வரைபொன்றை இறுதிய செய்யவுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகளை அக்குழு ஆரம்பித்திருக்கின்றது.

அவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதனை இலக்காக கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 20ஆவது திருதத்தின் பின்னரான சூழலில் அரசாங்கம் புதிய அரசியமைப்புக்கான பணிகளில் கூடிய கவனம் செலுத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளது என்றார்.

இதேவேளை ,பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலதத்தின் 3,5,14,22 ஆகிய நான்கு உத்தேச சரத்துக்கள்,நடை முறையிலுள்ள அரசியலமைப்பின் 3,4 ஆம் உறுப்புரைகளை மீறுவதாக அமைந்துள்ளதால் அவற்றை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்பின் 83 ஆவது உறுப்புரைக்கு அமைவாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமானது என்று 20ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உயர் நீதிமன்றம் பாராளுமன்றிற்கு அனுப்பிய தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.

20ஆவது திருத்தச்சட்டத்தின் 3ஆவது உறுப்புரையில் ஜனாதிபதியின், பணிகள் தத்துவங்கள் தொடர்பான மாற்றங்களும்,5ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுப்பதிலிருந்தான விடுபாட்டுரிமையையும் 14ஆவது உறுப்புரிமையில் பாராளுமன்றத்தினை கலைத்தல், கூட்டுதல் தொடர்பாக ஜனாதிபதிக்கான கால எல்லை மற்றும் அதிகாரங்கள் தொடர்பிலும் 22ஆவது உறுப்புரிமையானது ஆணைக்குழுக்கள் மற்றும் நியமனங்கள் தொடர்பான ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் பற்றியும் ஏற்பாடுகளை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.