-கபில்
“13 ஆவது திருத்தச் சட்டம் தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ள இந்தியாவை அதற்கு அப்பாற்பட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கு தமிழ்க் கட்சிகள் முனையவில்லை”
13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவின் தலைமையில் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தட்டியெழுப்பி விடப்பட்டுள்ள நிலையில்,-
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வுடனான, மெய்நிகர் இருதரப்பு பேச்சுக்களில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்த நிலையில் - வெளிநாடுகளுடனான இருதரப்பு உடன்பாடுகள் குறித்த விவாதம் ஒன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விவாதத்தில், உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், ஆனால், இந்திய- இலங்கை உடன்பாட்டை தாம் நிராகரிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி என்ற பொதுவான புரிதல் ஒன்று உள்ளது.
இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு பாதகமான முடிவுகளை எடுத்து வந்திருக்கிறது என்பதே முன்னணியின் நிலைப்பாடாகவும் இருந்து வந்திருக்கிறது.
ஆனாலும், இந்தியா தனது நலன்களை முன்னிறுத்தி, ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதிக்காத வகையில் முன்னெடுக்கும் நகர்வுகளை தாம் எதிர்க்கப் போவதில்லை என்றும் முன்னணியின் தலைவர்கள் கூறிவந்திருக்கிறார்கள்.
எவ்வாறாயினும், இந்தியாவுக்கும் முன்னணிக்கும் இடையில் ஒரு இரும்புத் திரையே இதுவரை தொங்கிக் கொண்டிருந்தது. இப்போது அந்த திரையை விலக்கிக் கொள்வதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியிருக்கிறது கஜேந்திரகுமாரின் உரை.
13 ஆவது திருத்தச் சட்டத்தை, நிராகரிக்கிறோமே தவிர, இந்திய - இலங்கை உடன்பாட்டை நிராகரிக்கவில்லை என்ற அவரது கருத்து முக்கியமானது.
இந்திய - இலங்கை உடன்பாட்டை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அதனை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டாலும், அதனை விட்டு வெளியே வந்து விட்டார்கள்.
கடைசி வரை இந்திய- இலங்கை உடன்பாட்டை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொள்ளவோ அதனை ஒரு தீர்வாகவோ, தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகவோ கருதவில்லை.
விடுதலைப் புலிகளின் மறுவடிவமாக தம்மைக் காண்பித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போது, விடுதலைப் புலிகள் ஏற்காத ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்வதாக கூறியிருப்பது முக்கியமானது.
இதற்கும் காரணம் இருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போது, பாராளுமன்றத்தில் இரண்டு ஆசனங்களைக் கொண்ட ஒரு கட்சி.
இந்தியா உள்ளிட்ட தரப்புகளுடன் பேச வேண்டிய நிலையில் இருக்கின்ற ஒரு கட்சி. இவ்வாறான நிலையில், இந்தியாவை ஒதுக்கி வைத்து விட்டு இலங்கைக்கு வெளியேயான நகர்வுகளைத் முன்னெடுக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.
சீனாவின் அதிகரித்துள்ள செல்வாக்கு, சிங்கள பௌத்த அடிப்படைவாத மேலாதிக்கம் தீவிரம் பெற்றுள்ள சூழல் என்பனவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, அதற்கு மாற்றான நகர்வுகளை முன்னெடுப்பது தவிர்க்க முடியாதது.
முன்னணி எப்போதுமே பூகோள அரசியல் பற்றியே பேசி வந்திருக்கிறது. வல்லரசுகளுடன் பேரம் பேசுவது பற்றியே அதிகளவில் உரையாடி வந்திருக்கிறது.
ராஜபக் ஷ சகோதரர்களின் ஆட்சி சீனாவுக்குச் சார்பான ஒன்றாக மாற்றம் காணக்கூடிய வாய்ப்புகள் உள்ள சூழலில், அதற்கு மாற்றான வல்லரசுகளுடன் தான் தமிழர் தரப்பு ஊடாட வேண்டும்.
அவ்வாறான தரப்புகள் இரண்டு தான். ஒன்று அமெரிக்கா, இன்னொன்று இந்தியா. இந்த இரண்டு நாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, பாராளுமன்றத்துக்குள் இருந்து குரல் கொடுப்பது மட்டும், முன்னணியைப் பலப்படுத்தாது.
எனவே, இந்தியாவையும், அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ளாத- ஒரு ஓட்டத்துக்கு தயாராக இருக்கிறோம் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார் கஜேந்திரகுமார்.
அதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான சி.வி.விக்னேஸவரனும் சமகாலத்தில், 13 ஆவது திருத்தம், மாகாணசபைகள் குறித்து மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர், வானதி சீனிவாசனின் ஏற்பாட்டில் நடந்த கலந்துரையாடலில் தான் அவர் பங்கேற்றிருந்தார்.
அவர், 13 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வல்ல என்றும், ஆனால் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு பொறிமுறை ஒன்று உறுதிப்படுத்தப்படும் வரையில் மாகாண சபைகளை கைவிட்டு விட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
சமஷ்டி பொறிமுறை உருவாக்கப்பட முன்னர், மாகாணசபைகளை இழப்பது தற்கொலைக்கு சமம் என்றும் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார். இந்திய- இலங்கை உடன்பாட்டை ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக் கொண்ட கட்சிகளையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
ஆனாலும், 13 ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்டதொரு அதிகாரப்பகிர்வு பொறிமுறையை கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக இந்தியா கூறுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு தொடக்கப் புள்ளியாக கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
அதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை, இழப்பதற்கும் கூட அவர்கள் தயாராக இல்லை.
இன்னொரு பக்கம், சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தான், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத தீர்வு என்பதிலும், இந்தக் கட்சிகள் உறுதியாக இருக்கின்றன.
ஆனாலும், 13 ஆவது திருத்தச் சட்டம் தான் தீர்வு என்ற நிலைப்பாட்டில் உள்ள இந்தியாவை அதற்கு அப்பாற்பட்ட நிலைக்கு கொண்டு செல்வதற்கு தமிழ்க் கட்சிகள் முனையவில்லை.
13 ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டே, மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டுக் கொண்டும், போட்டியிடத் தயாரான நிலையிலும் தான் இருக்கின்றன.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையான அமைதித் தீர்வு ஒன்றைக் காணும் கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. இந்தக் கடப்பாட்டை 1987இல் இந்தியா தானாகத் தான் ஏற்றுக் கொண்டது. தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே இலங்கை அரசுடன் அப்போது கையெழுத்திட்டிருந்தது, அவ்வாறான இந்தியாவுக்கு இப்போதும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காணும் பொறுப்பு உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இருக்கிறது.
என்னதான் இந்தியா, பூகோள அரசியல், பிராந்திய ஒற்றுமை பற்றிய கோட்பாடுகளுக்குள் சிக்கியிருந்தாலும், தமிழர்களின் சார்பில் கையெழுத்திட்ட நாடு என்ற வகையில் இந்தியாவுக்கு இன்னொரு படி மேலேயே கடப்பாடு இருப்பதை மறுக்க முடியாது.
அந்தக் கடப்பாட்டை உரக்கச் சொல்லும் வேளை வந்து விட்டதென்று தான் கூற வேண்டும். இலங்கையிடம் இந்தியா 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தும் நிலையில் அதற்கும் அப்பாற்பட்ட தீர்வைத் தான், தமிழர்கள் எதிர்பா்க்கிறார்கள் என்பதை தமிழ்க் கட்சிகள் இந்தியாவிடம் ஒருமித்த குரலில் வெளிப்படுத்த வேண்டும்.
அதற்குத் தேவை ஒரு தந்திரோபாயக் கூட்டு. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அந்த தந்திரோபாயக் கூட்டுக்கு தமிழ்க் கட்சிகள் எப்போது தயாராகப் போகின்றன? அவ்வாறான ஒரு தந்திரோபாயக் கூட்டு, புதுடெல்லியின் கதவைத் தட்டுகின்ற காலம் எப்போது தான் வரப் போகிறது?











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM