" இலங்கையில் மோசமான வகையில் இராணுவ மயமாக்கலையும் வடக்கு-கிழக்கின் தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் புதிய ஜனாதிபதி செயலணிகள் இன்னும் அதிகமாக்கும்" என வொசிங்டனை தளமாக கொண்ட சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு அண்மையில் கருத்தொன்றை தெரிவித்திருந்தது. வடக்கு கிழக்கின் தமிழர் அரசியல் தரப்பினரும் இந்த செயலணி குறித்து தமது அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்தே சர்வதேச அமைப்புகள், அல்லது புலம்பெயர் இயக்கங்களுடன் தொடர்புபட்ட அமைப்புகள் இதையெல்லாம் கூறுவது வழக்கம்தானே , புதிதாக என்ன கூறிவிடப்போகின்றனர் என்பதே இந்த கருத்து தொடர்பில் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாகும். ஆனால் இந்த விவகாரம் அவ்வாறானது அல்ல. இந்த செயலணிகளின் மூலமாக நீண்டகாலத்தின் பின்னர் விளைவுகளை வெளிப்படுத்தக்கூடிய விவகாரம் ஒன்றைத்தான் ஜனாதிபதி கோத்தாபய அரசாங்கம் ( வியத்மக எனவும் வைதுக்கொள்ளலாம் )கை வைத்துள்ளது.
ஜனாதிபதி மூலமாக உருவாக்கப்பட்டிருந்த குறித்த இரண்டு ஜனாதிபதி செயலணிகளில் ஒன்று பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பையும் மற்றும் ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியாகும். இந்த செயலணி நாட்டின் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, தேசிய பாதுகாப்பு, நாட்டிற்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்குமென கூறப்படுகின்றது. இரண்டாவது செயலணி சற்று மாறுபட்டதாகும். அதாவது கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஆய்வுகளை செய்து அங்குள்ள தொல்பொருளியல் பிரதேசங்களை பாதுகாக்க அமைக்கப்படுகின்றது என்றே கூறப்பட்டுள்ளது.
இந்த செயலணிகள் சாதாரணமான செயலணிகள் என வெளித்தோற்றத்திற்கு தெரிந்தாலும் கூட தேசிய பாதுகாப்பு என்ற போர்வையிலும், கொவிட் -19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதாக காரணம் காட்டியும் இராணுவ மயப்படுத்தல் மற்றும் சிங்கள மயமாக்கலையே இவ் இரு செயலணிகளின் உருவாக்கமும் வெளிப்படுத்துகின்றன. ஏனென்றால் இவ்விரு செயலணிகளும் முற்றுமுழுதாக சிங்களவர்களை மாத்திரம் உள்ளடக்கியதாகவும், இராணுவ அதிகாரிகளையும் தேரர்களை கொண்டதாகவுமே ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு குறித்த செயலணியை ஒருபுறம் விடுவோமே, கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கவென அமைக்கப்பட்ட செயலணியில் தேரர்களின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளன. அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கவென பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி ஆகியவர்களையும் ஜனாதிபதி இணைந்தாரோ தெரியவில்லை என்றே நினைக்கத்தோன்றுகின்றது.
நீண்டகால போராட்டத்தின் பின்னர் தமிழர் ஒருவரும் இதில் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் இந்த செயலணிக்குள் இருந்துகொண்டு எதனையுமே செய்ய முடியாது என்பதே உண்மையாகும். ஏனென்றால் தமிழர் ஒருவரை குறித்த செயலணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் கொடுக்காத அழுத்தங்கள் வேறேதும் இருக்காது. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தொடர்ச்சியாக இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு அழுத்தம் கொடுத்த வம்மனே இருந்தன. ஆகவே தமிழர் ஒருவரை வேண்டா வெறுப்பில் இணைத்துக்கொண்டதே இதில் உண்மையாகும்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் வடக்கில் அளவுக்கு அதிகமாகவே இராணுவ ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பொதுமக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றி இராணுவ முகாம்களை அமைத்து வைத்திருப்பது நீண்டகாலமாக நெருக்கடியை ஏற்படுத்தி வரும் விவகாரமாகும். அவ்வாறு இருக்கையில் தமிழ் பேசும் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு கிழக்கு நிலங்களில் இன்னும் அதிகமாக சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கும் நோக்கத்திலேயே வியத்மகவின் புதிய ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்படுகின்றன என்பது இப்போது உறுதியாகின்றது.
மேலும் கட்டுரைகள்...
- இன்று நவராத்திரி விரதம் ஆரம்பம்! உலகம் சுகாதார அவசரகால நிலையிலிருந்து விடுபட அம்பிகையை பிராத்திப்போம்!
- கடுமையான நடவடிக்கை!
- நடைப்பிணங்களாக வாழும் மக்கள்!
ஏனென்றால் இந்த செயலணி நிறுவப்பட்டதில் இருந்து இன்றுவரை கிழக்கிலும்- வடக்கிலும் ஆயிரத்து எழுநூற்று தொண்ணூறு (1790) பிரதேசங்களை தொல்பொருளியல் பகுதியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை பாதுகாக்க இராணுவம் மற்றும் தேரர்கள் மூலமாக முயற்சிக்கப்படுள்ளமையும் வெளிப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி செயலணி கிழக்கில் மேற்கொண்டுள்ள ஆராய்சிகளில் இதுவரையில் ஆயிரத்து நாற்பத்து ஏழு ( 1407 ) இடங்கள் தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 530 இடங்களும், அம்பாறை மாவட்டத்தில் 423 இடங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 94 இடங்களுக்காம இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் திருகோணமலை மாவட்டத்தில் முழுமையான ஆராய்சிகள் இன்னமும் முடியவில்லை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் இன்னமும் வேட்டையாடி முடியவில்லை என்றே அர்த்தப்படுகின்றது.
இதனை வெறுமனே புராதானமான இடங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்ற கோணத்தில் பார்த்துவிட முடியாது. கிழக்கு மாகாணாத்தில் தொல்பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணியை கிழக்கில் இராணுவ, அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் தலைமையில் முன்னெடுக்கப்படும் அரசாங்க ஆதரவுடனான சிங்கள குடியேற்றத்தின் பின்னணியாகவே பார்க்வேண்டும். ஏனெனில் கிழக்கை பொறுத்தவரை முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவும், தமிழர்கள் எண்ணிக்கையில் இரண்டாவதாகவும் வாழும் இந்த பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைப்பதன் மூலம் சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கவே இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கிழக்கில் மாத்திரம் அல்ல, வடக்கையும் குறிவைத்து செயற்படுவதே இந்த செயலணியின் நோக்கமாகும். பெயர் என்னவோ கிழக்கு மாகாண தொல்பொருள் பிரதேசங்களை அடையாளம் காணும் செயலணி என்றதற்கு, இவர்களால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்சிகளில் இதுவரையில் 383 இடங்களை தொல்பொருள் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளதாம். இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 176 இடங்களும், மன்னார் மாவட்டத்தில் 60 இடங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 18 இடங்களும், யாழ்ப்பணத்தில் 79 இடங்களும், வவுனியா மாவட்டத்தில் 50 இடங்களையும் தொல்லியல் திணைக்களம் அடையாளப் படுத்தியுள்ளனராம். அவற்றையும் பெளத்த அடையாளங்களாக மாற்றியமைக்க அடுத்த கட்டமாக யோசித்து வருகின்றனராம்.
எனவே ஜனாதிபதி உண்மையில் இந்த செயலணியை நியமிக்க கடந்த கால செயற்பாடுகள் எதுவும் காரணமாக இருக்க முடியாது, இலங்கையின் தற்போதைய ஆட்சியின் அடிநாதமாக காணப்படுகின்ற சிங்கள-பௌத்த தேசியவாத நெறிமுறைகளின் அடித்தளமாக ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் காணப்படுகின்றன என்பதே இதனை அர்த்தமாகும். ஆரம்பத்தில் கூறியதை போல் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களை தாண்டி சிங்கள பெளத்த ஆதிக்கத்தை பலப்படுத்துவதே இந்த செயலணியின் அடித்தள வேலைத்திட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கத்தின் இத்தகைய நகர்வுகளின் மூலமாக நாட்டில் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஊருடுவுகின்ற இனவெறியை மேலும் அதிகரிக்கும் என்பதுடன் இதற்கு எதிரான அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் நியாயம் கேட்கும் பட்சத்தில் அதற்கு எதிரான அடக்குமுறையை சிங்கள பேரினவாத சக்திகளோ அல்லது அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கும் காவி சக்திகளோ உருவெடுக்கும் என்பதே உண்மையாகும். இதனை கட்டுப்படுத்த தவறினால் பின்னர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,குறிப்பாக இந்த விளைவுகள் தமிழ் முஸ்லீம் சமூகத்தினருக்கு எதிரானதாக வந்தமையும் என்பதே நிதர்சனம்.
(ஆர்.யசி)
தரவுகள் :- தகவல் அறியும் சட்டமூலம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM