உத்தப்பா மற்றும் ஸ்மித்தின் அதிரடியான ஆட்டம் காரணமாக ராஜஸ்தான் அணி 177 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 33 ஆவது ஆட்டம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமாகியுள்ளது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

ராஜஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோபின் உத்தப்பாவும், பென் ஸ்டோக்ஸும் களமிறங்கி சீரான ஓட்டத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி இவர்கள் இருவரும் இணைந்து 50 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தபோது முதல் விக்கெட் 6 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் வீழ்த்தப்பட்டது.

கிறிஸ் மோரிஸின் பந்து வீச்சில் பென்ஸ்டோக்ஸ் 15 ஓட்டங்களுடன் டிவில்லியர்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க சஞ்சு சம்சன் களமிறங்கினார்.

சஞ்சு சம்சனுடன் ஜோடி சேர்ந்த ரோபின் உத்தப்பா எட்டாவது ஓவரின் 4 ஆவது பந்தில் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த பந்தில் சஞ்சு சம்சன் 9 ஓட்டங்களுடன் சாகாலில் சுழலில் சிக்கி கிறிஸ் மோரிஸுடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பானார்.

இதனால் ராஜஸ்தான் அணி 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

4 ஆவது விக்கெட்டுக்காக ஜோஸ் பட்லரும் ஸ்டீவ் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து, பெங்களூரு அணியின் பந்து வீச்சுகளை சிதறடிக்க ராஜஸ்தான் அணி 15 ஓவர்களின் நிறைவில் 119 ஓட்டங்களை குவித்தது.

எனினும் அதன் பின்னர் பட்லர் 15.3 ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய ராகுல் தேவதியாவுடன் கைகோர்த்த ஸ்டீவ் ஸ்மித் 17.4 ஆவது ஓவரில் மொத்தமாக 30 பந்து வீச்சுகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக அரைசதம் பெற்றார்.

எனினும் ஸ்மித் 19.2 ஆவது ஓவது ஓவரில் 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தேவதியா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பெங்களூரு அணி சார்பில் பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளையும், சஹால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.