நியூஸிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜசிந்த ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கான ஜசிந்த ஆர்டெர்னின் முயற்சியினை கருத்திற் கொண்டு மக்கள் அவருக்கு இந்த ஆதரவினை வழங்கியுள்ளனர்.

வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தின்அரசியல் வர்ணனையாளர் பிரைஸ் எட்வர்ட்ஸ், 80 ஆண்டுகளில் நியூசிலாந்தின் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி இதுவென சுட்டிக்காட்டியுள்ளார்.

1996 ஆம் ஆண்டில் நியூசிலாந்து விகிதாசார வாக்களிப்பு முறையை ஏற்றுக்கொண்டதிலிருந்து எந்தவொரு கட்சியினரும் பெற்ற மிக உயர்ந்த பெரும்பான்மையாக இந்த முடிவு அமைந்துள்ளது.

அதன்படி பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன் தலைமையிலான தொழிற் கட்சி பாராளுமன்றின் 120 இடங்களில் 64 இடங்களை பெற்றுள்ளது.

தொழிற் கட்சியானது 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசனங்கனை வென்றுள்ளமையினால் ஆர்டெர்னால் தற்போதைய அமைப்பின் கீழ் ஒற்றை கட்சி அரசாங்கத்தை உருவாக்க முடியும்.

இது இவ்வாறிருக்க வெற்றி பெற்றதையடுத்து ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்து, கூடிவந்த ஆதரவாளர்களை அணைத்துக் கொண்டார்.

இந் நிலையில் ஜசிந்த ஆர்டெர்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்  கட்சியான தேசியக் கட்சித் தலைவர் ஜூடித் கொலின்ஸ், ஜசிந்தாவுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தும் உள்ளார்.