நீண்ட காலமாக குன்றும் குழியுமாக அகலம் இல்லாமல் காணப்பட்ட ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  தலைமையில் அபிவிருத்தி  செய்வதற்காக பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த வீதி நீண்ட காலமாக புனரமைக்கபடாமையினால் பல விபத்துகள் இடம்பெற்றன.

கடந்த 02 ம் திகதி காலை 7.00 மணியளவில் டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று போடைஸ் என்.சி தோட்டப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 51 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி மற்றும் அக்கரபத்தனை பிரதேச தலைவர் ஆகியோர் இணைந்து குறித்த பாதையூடான பஸ் போக்குவரத்துக்கும் பார ஊர்தி போக்குவரத்துக்கும் தடை விதித்தனர்.

அதனை தொடர்ந்து இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய டிக்கோயாவிலிருந்து மன்றாசி வரை சுமார் 15.5. கிலோ மீற்றர் தூரம் 450 மில்லியன் ரூபா செலவில் பாதையினை அகலப்படுத்தி காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வீதி அபிவிருத்தி புனரமைப்பு பணிகளை போடைஸ் பகுதியில் வனத்துறை அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிராமிய வீதிகள் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் நிமல் லங்சா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.

இதேவேளை, அக்கரபத்தனையிலிருந்து  போபத்தலாவ ஊடாக மெனிக்பாலமிற்கு செல்லும்  9 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதியை 186 மில்லியன் ரூபா செலவில் காபட் இட்டு புனரமைக்க இதன் போது பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.