(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட 61,907 வியாபாரங்களுக்கு கடனுதவிகளை வழங்குவதற்காக 178 பில்லியன் ரூபா நிதி மத்திய வங்கியினால் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிடமிருந்து கடந்த 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற கடன் விண்ணப்பங்களில் 61,907 கடன் கோரிக்கைகளுக்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது. இவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய வியாபாரங்களுக்குக் கடன் வழங்குவதற்காக மொத்தமாக 177, 954 மில்லியன் ரூபா (சுமார் 178 பில்லியன் ரூபா) ஒதுக்கப்பட்டிருப்பதுடன் இது சௌபாக்யா கொவிட் - 19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இதுவரையில் உரிமம்பெற்ற வங்கிகளின் ஊடாக நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட 45,582 வியாபாரங்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டிருப்பதுடன் அதற்காக 133,192 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கடன்திட்டத்தின் முதற்கட்டம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் கடந்த ஜுலை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆண்டிற்கு 4 சதவீத வட்டியில் மொத்தமாக 150 பில்லியன் ரூபாவை தொழிற்படு மூலதனக்கடனாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகக் காணப்பட்டது.

இந்தக் கடன்கள் 6 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக 24 மாதங்கள் மீளச்செலுத்தும் காலத்தினை வழங்குகின்றது. கொவிட் - 19 வைரஸ் பரவலின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகளான தனிநபர்கள் இதன்மூலம் பயன்பெறுவோராக உள்ளனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைக் கருத்திற்கொண்டு, மத்திய வங்கியினால் முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 150 பில்லியன் ரூபா வரையறையைக் கருத்திற்கொள்ளாது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இறுதித்திகதி வரையில் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அனைத்து விண்ணப்பங்களும் இக்கடன் திட்டத்தின் கீழ் கவனத்திற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.