கபாலி படத்தை வெளியிட தடைகேட்டு வழக்கு : மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

By Robert

21 Jul, 2016 | 10:46 AM
image

‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை தராததால் ‘கபாலி’ படத்தை வெளியிட தடைகேட்டு வினியோகஸ்தர் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி, நடிகர் ரஜினிகாந்த், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சென்னை சுக்ரா பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் மகாபிரபு. இவர், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை ‘ராக்லைன்’ வெங்கடேஷ் தயாரித்தார். இந்த திரைப்படத்தை வேந்தர் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த நிறுவனத்துக்கு ரூ.13.25 கோடியை கொடுத்து, இந்த திரைப்படத்தை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வினியோகம் செய்யும் உரிமத்தை பெற்றோம்.

இந்த படம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆந் திகதி, ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவு ‘லிங்கா’ படம் லாபத்தை தரவில்லை. இதனால், எங்கள் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.7.45 கோடி நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோல பல வினியோகஸ்தர்களுக்கும் இழப்பு ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், நஷ்டஈடு வழங்கும்படி, இந்த படத்தை வெளியிட்ட வேந்தர் மூவிஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தோம்.

இதையடுத்து படத்தை தயாரித்த ‘ராக்லைன்’ வெங்கடேஷ், இழப்பீடு தருவதாக உறுதியளித்தார். இதுநாள் வரை அதை அவர் தரவில்லை. அதன்பிறகு, ரஜினிகாந்தும், ராக்லைன் வெங்கடேசும் சேர்ந்து, அனைத்து வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரூ.12.50 கோடி இழப்பீடு வழங்கினார்கள். 

இதில், கோவை மண்டலத்துக்கு ரூ.2.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ரூ.1.70 கோடியை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கிவிட்டனர். மீதமுள்ள ரூ.89 இலட்சத்தை எங்கள் நிறுவனத்துக்கு இதுவரை தரவில்லை.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ என்ற திரைப்படத்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படம் தயாரிக்கப்படும்போதே, ‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக வழங்கவேண்டிய ரூ.89 இலட்சத்தை தானே வழங்கி விடுவதாக எங்களுக்கு கலைப்புலி எஸ்.தாணு உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், அந்த பணத்தை அவர் இன்னும் தரவில்லை. எனவே, எங்களுக்கு தரவேண்டிய ரூ.89 இலட்சத்தை வழங்கும் வரை, ‘கபாலி’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு ‘ராக்லைன்’ வெங்கடேஷ், வேந்தர் மூவிஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right