தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கு முன்மொழிவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (16) தெரிவித்தார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கு முன்மொழிவு

அலரி மாளிகையில் இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடல் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 

2020-2024 இற்கான தேர்தல் ஆணைக்குழுவின் மூலோபாய திட்டமிடலுக்கு அமைய தேர்தல் சட்ட திருத்தத்தை மேற்கொள்வது அத்தியவசியமாகும் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தேர்தலுக்கான வைப்பு தொகையில் திருத்தங்களை மேற்கொள்ளல், 

தேர்தல் இடம்பெறும் தினத்தில் வாக்களிப்பதற்கு முடியாத நபர்களுக்கு அதற்கு முன்னதாக ஒரு தினத்தில் வாக்களிக்க வாய்ப்பளித்தல், 

18 வயது பூரணமானவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தல், 

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல், வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையோருக்கான வசதிகளை ஏற்படுத்துதல் 

 விசேட திட்டத்தின் கீழ் இணைய வாக்களிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலின் போது பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், பிரதமரின் மேலதிக செயலாளர்களான சமிந்த குலரத்ன, கணேஷ் தர்மவர்தன (சட்டம்), தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.டி.டீ.ஹேரத், பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.அச்சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.