13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் 32 ஆவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது. 

இறுதியாக ஆடிய 4 ஆட்டங்களில் வாகை சூடிய மும்பை அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ளது. 

ரோகித் சர்மா, டி காக், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, சூர்யகுமார், இஷான் கிஷன், டிரெண்ட் கோல்ட் போல்ட் என்று பெரும் நட்சத்திர பட்டாளத்தை உள்ளடக்கிய மும்பை அணி அசுர பலத்துடன் திகழ்வதால் இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. 

ஏற்கனவே இதே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியிருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் இறங்குவார்கள். ‘

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4 ஆவது இடம் வகிக்கிறது. 

துடுப்பாட்டத்தில் ஓரளவு நல்ல நிலையில் உள்ள கொல்கத்தா அணியில் பந்து வீச்சு தான் சீராக இல்லை. சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மட்டும் ஆறுதல் அளிக்கிறார்.

பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கிய சுனில் நரின் இந்த ஆட்டத்திலும் களம் காணுவது சந்தேகம் தான். 

பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கொல்கத்தா வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்தினால் மட்டுமே மும்பையின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட முடியும். 

இந் நிலையில் இப் போட்டியில் கொல்கத்தா அணிக்கான தலைமைத்துவத்தை இயன் மோர்கன் ஏற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.