இரண்டரை ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு வெளியாகும் ‘நுங்கம்பாக்கம்’ படத்தை இந்திய மதிப்பில் ஐம்பது ரூபாயை கட்டணமாக செலுத்தி பார்வையிடலாம் என்று அப்படத்தின் இயக்குநரான ரமேஷ் செல்வன் தெரிவித்திருக்கிறார்.

திதிர்  பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் சார்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘நுங்கம்பாக்கம்’. இப்படத்தில் நடிகர்கள் அஜ்மல், ஆர்.என் ஆர் மனோகர், மனோ,நடிகை ஐரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இரண்டரை ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு இப்படம் ஒக்டோபர் 24 ஆம் திகதியன்று சினிபிளக்ஸ் என்ற டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது. இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ரவிதேவன், நடிகர்கள் ஆர் என் ஆர் மனோகர்,மனோ, நடிகை ஐரா, பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ரமேஷ்செல்வன்  உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

இதில் இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசுகையில்,‘ இரண்டரை வருட போராட்டம். கஜினி முகமதுவை  விட அதிகப்போராட்டத்தைச் சந்தித்தேன். சினிமாவில் சில விடயங்களை செய்யவே முடியாது. ஒரு ‘மேட்டர்’ படத்தை எடுத்தால் எளிதாக வெற்றிப்பெற்றிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். இந்தப்படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய வரவேற்பு கிடைத்தது.. உடனடியான வியாபாரத்திற்கான வழியும் கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தை வெளியிடக்கூடாது என பெண்ணின் தந்தை வழக்கு தொடுத்தார்.

ரயில் நிலையத்தில் ஒரு பெண் இறந்து, மூன்று மணி நேரம் வரை யாருமே அருகில் செல்லவில்லை. அதைப் பார்த்த ஒவ்வொருவரும் அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர். இது எம்மை பாதித்தது. இதனை எம்முடைய நண்பரான கதாசிரியரிடத்தில் எடுத்துரைத்து, இதனை படமாக உருவாக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் இந்தப்படத்தின் கதைக்காக சம்பவம் நடந்த பகுதியிலுள்ள ஒவ்வொரு வீதியாக அலைந்து திரிந்து தகவல்களைத் திரட்டிய பிறகு எழுதினார்.  இந்தப்படத்தில் சைபர் க்ரைம், காவல் துறை என பல கோணங்கள் இடம்பெற்றிருக்கிறது.

அதன்பின் தணிக்கைக்குழுவிற்குச் சென்றேன்.அங்கு கதாப்பாத்திரத்தின் பெயர், டைட்டில், க்ளைமேக்ஸ் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பெயரையும், டைட்டிலையும் மாற்ற சம்மதித்த நான், க்ளைமேக்ஸை மாற்ற சம்மதிக்கவில்லை. பின் ஆறுமாத போராட்டம். அது முடிந்ததும் அந்தணர்கள் வழக்குத் தொடுத்தனர். அதன்பின் ஒரு வழக்கு வந்தது. அதையும் சமாளித்து  படத்தை வெளியிட நினைத்தால் கொரோனா வந்துவிட்டது. தற்போது Cineflix என்ற ஓடிடியில் படம் வரும் 24-ஆம் திகதியன்று வெளிவருகிறது. இந்தப்படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77-ஆம் எண்ணை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம். தயவுசெய்து இந்திய மதிப்பில் 49 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்வையிடலாம். தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் நான் தற்கொலைத் தான் செய்து கொள்ளவேண்டும். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்.’ என்றார்.

சுவாதி கொலை வழக்கு என்ற நுங்கம்பாக்கம் என்ற பெயரில் தயாராகியிருக்கும் இந்த படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு தயாரான படம் இது என்பதும், பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை நுட்பமாக வலியுறுத்தும் வகையில் படமாக தயாராகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.