தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடைகள் மற்றும் மருந்தகங்கள் நாளையும் நாளை மறுதினமும்  (17, 18) திறக்க அனுமதிக்கப்படாது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் கொத்தணி பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் , மருந்தகங்களை இன்றைய தினம் மாத்திரம் திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வார இறுதி நாட்கள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். 

119 கொரோனா நோயாளர்கள் தப்பிச் சென்றனரா? - அஜித் ரோஹன விளக்கம் | Virakesari .lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் கொத்தணி பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் கட்டுநாயக்க உட்பட 19 பொலிஸ் பிரிவுகளிலும் தொற்றுநீக்க சட்டவிதிகளுக்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை மொத்தமாக 167 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்கள் உட்பட 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மதிக்குமாறு குறிப்பாக பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளின்படி கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், வார இறுதி நாட்களான நாளையும் நாளை மறுதினமும் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில்  கடைகள் மற்றும் மருந்தகங்கள்  திறக்கப்பட கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.