முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க 'அசுரன்' பட புகழ் நடிகர் டிஜே மறுப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் எம். எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் விஜயசேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் 800 இலங்கை பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இளவயது முத்தையா முரளிதரனாக நடிக்க வந்த வாய்ப்பை 'அசுரன்' பட புகழ் நடிகர் டிஜே மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்,' நான் இந்தியாவில் இருந்தபோது 800 படத்தின் தயாரிப்பாளர்கள் எம்மை அணுகினர். தயாரிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் திரைக்கதையின் அனைத்து விடயங்களையும் விரிவாக விளக்கினர். 

இந்த படத்தில் முரளிதரனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நானும், மூத்த வயது முரளிதரனாக விஜயசேதுபதி சாரும் நடிப்பதாக இருந்தது. இந்தப்படத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

அது எமக்கு சரியென்று தோன்றவில்லை. என் அம்மா ஈழ தமிழச்சி தான். போரில் ஏராளமான கொடுமைகள் நடைபெற்றன. மேலும் படத்தின் கதைகளின் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை. எனவே அவர்களிடம் இந்த படத்தில் நடிக்க இயலாது என்று உறுதியாக சொல்லி விட்டேன். விஜய் சேதுபதி மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். 'அசுரன்' படத்தில் வேல்முருகன் போன்ற ஒரு வலுவான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் என்னை பாராட்டி இருக்கிறார். மேலும் சரியான திரைக்கதைகளை தெரிவுசெய்து நடிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். அதனால்தான் இத்தகைய ஒரு முடிவை நான் எடுத்திருக்கிறேன்.' என்றார்.

நடிகர் டிஜே அருணாச்சலத்தின் இந்த முடிவை இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இதேபோன்று முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.