ஆனைமடு - கொட்டுக்கச்சி குடா கிவுல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஆனைமடு - கொட்டுக்கச்சி, கெக்குரஹான பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய என். எம். டிக்கிரி பண்டா எனும் மீனவர் ஒருவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கொட்டுக்கச்சி பகுதியிலிருந்து குடா கிவுல பகுதிக்குச் சென்று மீன் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அந்தப் பகுதியிலிருந்த பெரிய தேக்கு மரமொன்றிலிருந்த குளவிகள் கொட்டியுள்ளன. 

இதன்போது அவர் அருகிலிருந்த குழியில் விழுந்து காயமடைந்துள்ளார்.  அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மேலும் நால்வரையும் குளவிகள் கொட்டியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மீனவர் உள்ளிட்ட ஐவரும் கொட்டுக்கச்சி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த மீனவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.