13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 31 ஆவது போட்டி இன்றைய தினம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூரு மற்றும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஆரம்பமாகவுள்ளது.

சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கடந்த ஐ.பி.எல் தொடரில் 14 போட்டிகளில் வெறும் 5 வெற்றிகளுடன் இறுதி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி இந்த தொடரில் அசத்தலாக விளையாடி வருகிறது. 

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5 இல் வெற்றியும், 2 இல் தோல்வியும் கண்டு நல்ல நிலையில் உள்ளது. 

முன்னணி நான்கு துடுப்பாட்ட வீரர்களான  ஆரோன் பிஞ்ச் , தேவ்தத் படிக்கல், விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் பெங்களூரு அணிக்கு தூண்கள் போல் உள்ளனர்.

இதேபோல் பந்து வீச்சில் ஓவருக்கு சராசரி 4.90 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் வொஷிங்டன் சுந்தர் யுஸ்வேந்திர சாஹல், கிறிஸ் மோரிஸ் மற்றும் உதனாவும் அணிக்கு வலு சேர்க்கிறார்கள். 

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் பெங்களூரு அணிக்கு களத்தடுப்பு தான் சற்று சொதப்பலாக உள்ளது. 

இந் நிலையில் 7 ஆட்டங்களில் 6 இல் தோல்வியைத் தழுவி உள்ள பஞ்சாப் அணிக்கு மீதமுள்ள 7 ஆட்டங்களும் வாழ்வா-சாவா போராட்டம்தான். ஒன்றில் தோற்றாலும் கிட்டத்தட்ட பிளே-ஆப் கனவு தகர்ந்து விடும். 

பஞ்சாப் அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் ராகுலும் மயங்க் அகர்வாலும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் நடுத்தர வரிசையில் நிகோலஸ் பூரன் தவிர மற்றவர்களின் ஆட்டம் மோசமாக உள்ளது. 

உடல் நலக்குறைவில் இருந்து மீண்டுள்ள ‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் முதல் முறையாக இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என்றம் கூறப்படுகிறது.