பெய்ஜிங், (சின்ஹூவா) கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையொன்றின் ஆபத்து அண்மைய வாரங்களில் அச்சம் தருகின்ற அளவுக்கு யதார்த்தமாகி விட்டது. 

தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து அது உலகளாவிய ரீதியில் மக்களுக்குக் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியது சகலதையும் விட மிக முதன்மைக்குரியதாக மாறிவிட்டது.

உலகின் பெரும்பாலான நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து விநியோகிப்பதற்கு அவற்றின் முயற்சிகளை ஒன்று குவித்திருக்கும் அதேவேளை, உலகம் தற்போது வெளிக்கிளம்பியிருக்கின்ற தடுப்பூசித் தேசிய வாதத்துக்கு எதிராக முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

தடுப்பூசி தேசிய வாதம் என்பது (Vaccine Nationalism)ஒரு நாடு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து அதன் சொந்த பிரஜைகளுக்கும் சொந்த சந்தைக்கும் விநியோகிப்பதற்கு அதிமுன்னுரிமை கொடுப்பதும், ஏனைய நாடுகளுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கின்ற போக்கும் ஆகும்.

இந்த தேசிய வாதம் ஒரு நாட்டுக்கு எதிராக மற்றைய நாட்டைத் திருப்பிவிடும் ஆபத்தையும், பாரிய சவால் மிக்க இந்த தருணத்தில் உலகின் வறிய மக்களை தொற்று நோயிலிருந்து பாதுகாப்பற்றவர்களாக்கி விடும் ஆபத்தையும் கொண்டிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவுடன் உலகளாவிய ரீதியில் கொவிட் - 19 தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெறுவதற்காக முன்னெடுக்கப்படுகின்ற கொவக்ஸ் செயற்திட்டத்தில் ( Covid – 19 Vaccines Global Access COVAX ) 180 இற்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றிருக்கின்றன.

மிகுந்த பிரயாசையுடன் முன்னெடுக்கப்படுகின்ற இந்த செயற்திட்டத்தின் நோக்கம் கொவிட் - 19 தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக நம்பகத்தன்மை வாய்ந்ததும் பயன்தரத்தக்கதுமான தடுப்பு மருந்துகள், உலக மக்களுக்கு ஒப்புரவான முறையில் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதும், 2021 பிற்பகுதியளவில் 200 கோடி சொட்டுகள் தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெறுவதற்காகப் பணியாற்றுவதுமே ஆகும்.

“இந்த சர்வதேச ஒத்துழைப்பும் ஒருமைப்பாடும் பாராட்டத்தக்கதும் அத்தியாவசியமானதும் ஆகும்” என்று நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆபிரிக்க நிலையங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். அவர்களின் அந்தக் கருத்து, Nature என்ற சஞ்சகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தொற்று நோய்க்கு எதிரான இறுதி முடிவான ஆயுதத்தை சர்வதேச சமூகத்தின் கையில் கொடுப்பதற்கும், தடுப்பு மருந்தொன்று தேவைப்படும் சகலருக்கும் அது கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்கும் கொவக்ஸ் கூட்டணியில் இணைவதன் மூலம் உலகின் கூட்டு நடவடிக்கைக்குப் பங்களிப்பு செய்வதில் சீனா நாட்டம் கொண்டிருக்கிறது.

சீனாவின் இந்த முயற்சியை வரவேற்பதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவியான, ஊர்சுலா வொன் டெர் லீயென் கூறியிருக்கிறார். 

“இந்த செயற்திட்டத்தில் நாம் எல்லோரும் பங்கேற்கிறோம். தடுப்பு மருந்துகள் தேவைப்படுகின்ற இடங்களுக்கும் தேவைப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் அவை கிடைக்கப்பெறுவதற்கு பல்தரப்பு அணுகுமுறை (Multilateralism) முக்கியமானதாகும்” என்று அவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை செய்திருக்கிறார்.

நூற்றாண்டுக்கு ஒரு தடவை தோன்றுகின்ற இத்தகைய பொதுச்சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதில் பெரும்பாலான நாடுகள் இணைந்து கொள்கின்ற நிலையில் வாஷிங்டன் ‘அமெரிக்கா முதலில்’ என்ற அதன் ஒதுக்க நிலைக் கொள்கையின் கீழ் தனித்து செயற்படுவதன் மூலமாக சர்வதேச சமூகத்திற்கு முதுகைக் காட்டியிருக்கிறது. 

உலக சுகாதார நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பதன் காரணமாகவும் பல்தரப்பு நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பாத காரணத்தினாலும் கொவக்ஸ் செயற்திட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று கடந்த வாரம் அமெரிக்க நிர்வாகம் கூறியது.

மக்களுக்குப் பயன்படக்கூடியப் பெருமளவு தடுப்பு மருந்து விநியோகங்களைப் பூட்டி வைப்பதில் வாஷிங்டன் அடாவடித்தனமான முறையில் செயற்பட்டிருக்கிறது.

குறைந்தபட்சம் 70 கோடி சொட்டுக்கள் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக அமெரிக்கா சுமார் 1000 கோடி டொலர்களை ஒதுக்கியிருக்கிறது.  இந்த அணுகுமுறை தடுப்பு மருந்துத் தேசியவாதத்தின் ஆபத்தான வளர்ச்சியை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

தடுப்பு மருந்துத் தேசியவாதம் தீவிரமாகப் பரவுகின்ற வைரஸைப் போன்று பரவுவதற்கு அனுமதிக்கப்படுமானால், மிகவும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தைக் கொண்ட பொருளாதாரங்கள் நேர காலத்தோடு தடுப்பூசிகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். 

இந்த நிலைவரம் உலகின் சகல மூலை முடுக்குகளுக்கும் விரிவடைவதற்கு முன்னராக வறிய நாடுகளில் முதலில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.

வசதி படைத்த நாடுகள் விநியோகங்களை வெறுமையாக்கும்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் விநியோகங்களுக்காகக் காத்திருக்க வேண்டி வருகிறது. 

இந்த இடைப்பட்டக்காலத்தில் வறிய நாடுகளில் வாழுகின்ற சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களும் கோடிக்கணக்கான வயோதிபர்களும் எளிதில் ஆபத்திற்குள்ளாகக்கூடிய நிலையிலுள்ள ஏனைய பிரிவினரும் பாதுகாக்கப்பட முடியாத நிலை தோன்றுகிறது. 

இது தொற்று நோயை மேலும் விரிவடையச் செய்து மரணங்களை அதிகரிக்கின்றது. 

நொய்தான நிலையிலுள்ள சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்களும் பொருளாதாரங்களும் ஆபத்திற்குள்ளாகின்றன என்று வெளியுறவுகள் தொடர்பான அமெரிக்கக் கவுன்ஸிலில் உலக சுகாதாரச் செயற்திட்டப் பணிப்பாளரான தோமஸ் பொலிகீயும் சர்வதேசப் பொருளாதாரங்களுக்கான பீட்டர்சன் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளரான ஷாட் பவுனும் வெளியுறவு விவகார சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் “தடுப்பு மருந்துத் தேசிய வாதத்தின் அவலம்” என்ற தலைப்பிலான தங்களது ஆய்வில் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

கொடிய வைரஸை எதிர்கொள்கின்ற விடயத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்கக்கூடிய நிலை தோன்றும் வரை எவருமே என்றைக்கும் பாதுகாப்பானவர்களாக இருக்கப்போவதில்லை. 

அதனால், ஒவ்வொருவரும் பாதுகாக்கப்படும் வரை செயல்முறைக்கு ஒத்த நோய்த்தடுப்பு ஏற்பாடுகள் இருக்கப்போவதில்லை.

அதன் காரணத்தினால் தான் உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெபிரியேசஸூம் அந்த நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளும் திரும்பத் திரும்பத் தடுப்பு மருந்துத் தேசிய வாதத்துக்கு எதிராக எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். 

சீனாவும் கூட அதே காரணத்தினால் தான் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு விவகாரங்களில் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பை நெடுகவும் பேணிவருகிறது. 

அத்துடன் உலகின் பொது நன்மைக்கான தடுப்பு மருந்துகைளக் கண்டுபிடிப்பதற்கு சூளுரைத்தும் இருக்கிறது.

வைரஸூக்கு எல்லைகள் கிடையாது. தேசம், இனம் அல்லது தடுப்பு மருந்துக்காகப் பணத்தை செலவிடக்கூடிய ஆற்றல் ஆகியவை எல்லாவற்றையும் கடந்து உலகம் பூராகவும் மக்களுக்கு வைரஸ் பரவுகிறது. 

சாத்தியமானளவுக்கு நேர காலத்தோடு தடுப்பு மருந்து ஏற்றலினூடாகவும் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதன் மூலமாகவும் மாத்திரமே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வழமை வாழ்வுக்கு திரும்ப முடியும்.

தடுப்பு மருந்துத் தேசிய வாதத்தை உறுதியான முறையில் நிராகரித்து சர்வதேச சமூகம் இந்தத் தொற்று நோயை முற்று முழுதாகத் தோற்கடிப்பதில் இருக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.