(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு மாநகரசபையை இரண்டு தினங்களுக்கு அடைத்துவிடவும் பொது மக்கள் நிவாரண திணைக்கள காரியாலயத்தை இரண்டுவாரங்களுக்கு பூட்டிவிடவும் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்டவர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன் நிவாரணம்! |  Virakesari.lk

மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்திருக்கும் பொது மக்கள் நிவாரண திணைக்களத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்திருந்தார். 

அதற்கமையவே கொழும்பு மாநகரசபையை நேற்று 15ஆம் திகதி மற்றும் இன்று 16ஆம் திகதியும்  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் கொரோனா தொற்றுக்கு ஆளாகிய பெண் ஊழியர் பணிபுரிந்த காரியாலயத்தின் 80 ஊழியர்களிடம் நேற்று பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளான பெண் நெருங்கிப்பழகியதாக இனம்காணப்பட்ட, நகரசபையைச்சேர்ந்த 110பேரிடம் இன்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள இருக்கின்றது. 

அதன் காரணமாகவே மாநகரசபை மற்றும் மருதானை காரியாலயங்களை தற்காலிகமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் ஊழியரின் கனவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.