(நா.தனுஜா)

இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவதன் ஊடாக இலங்கையுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மத் சாத் கட்டாக் நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புக்கள், சுற்றுலா, கல்வி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக பாகிஸ்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த இருதரப்புக் கலந்துரையாடலின் போது அபிவிருத்தி, வர்த்தகம், கல்வி, தொழிற்பயிற்சி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கும் தயாராக இருப்பதாக அந்நாட்டு உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்தார்.

அதுமாத்திரமன்றி இலங்கையுடனான நீண்டகால நட்புறவை பாகிஸ்தான் பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்ட பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர், பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவதன் ஊடாக இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றி இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.