( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து உரிய நீதிமன்றில் ஆஜர் செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (13 ) மாலை ஆலோசனை வழங்கிய நிலையில், அவரை கைது செய்ய இரு குழுக்கள் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மன்னார் வீட்டுக்கு ஒரு குழுவும் கொழும்பிலுள்ள வீட்டுக்கு மற்றொரு குழுவும் அவரைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளதாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.  அரச பணம் தவறாக பயன்படுத்தப்ப்ட்டமை தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பிலும் அவரையும் மேலும் இருவரையும் இவ்வாறு சந்தேக நபர்களாக  பெயரிட்டு வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ளவும், கைது செய்து உரிய மன்றில் ஆஜர்படுத்தவும்  சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த  வாக்காளர்களுக்கு சிலாபத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.