(இராஜதுரை ஹஷான்)

இரண்டாம் குடியரசு யாப்பில்  இதுவரை காலமும் செய்யப்பட்டுள்ள திருத்தங்களில் சாதகமான விடயங்கள் புதிய அரசியமைப்பு உருவாக்கத்தில் இணைத்துக் கொள்ளப்படும். 

நாட்டுக்கு பொருந்தும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படும்.  என பாராளுமன்ற உறுப்பினர்  டிலான் பெரேரா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்தரப்பினர் சமூகமட்டத்தில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். 

19ஆவது திருத்தம் எவ்வகையான முரண்பாடுகள் அரச நிர்வாகத்தில் ஏற்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கு தெரிந்துக் கொண்டார்கள்.

மதகுருமார்களின் பெயர்களை குறிப்பிட்டுக் கொண்டு 20 ஆவது திருத்தத்துக்கு எதிரான  போலிபிரச்சாரங்களை எதிர்தரப்பினர் தற்போது முன்னெடுத்து வருகிறார்கள்.

 20  ஆவது அரசியமைப்பு திருத்தம் எவ்விதமான முறையற்ற  விடயங்களையும் உள்ளடக்கியிருக்கவில்லை. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை கையகப்படுத்த அரசியமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக முன்னெடுத்த சூழ்ச்சி    முரண்பாடுகளை தோற்றுவித்ததால்  முழு அரச நிர்வாகமும்  பலவீனமடைந்தது.

நாட்டுக்கு பொருந்தும் விதத்திலான புதிய அரசியமைப்பினை உருவாக்குவது அரசாங்கத்தின் பிரதான   எதிர்பார்ப்பாக காணப்படுகிறது. 1978 ஆம்  ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல்  யாப்பில் இதுவரை காலமும் செய்துக் கொள்ளப்பட்டுள்ள 19 திருத்தங்களில் காணப்படும் சாதகமான அம்சங்கள் புதிய  அரசியமைப்பில் இணைத்துக் கொள்ளப்படும் என்றார்.