(எம்.ஆர்.எம்.வஸீம்)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் திட்டமிட்ட செயலாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் இது தொடர்பில் உண்மையை கண்டறிய வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் அடிக்கடி ஏதாவது சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக சாலாவையில் இடம்பெற்ற இராணுவ ஆயுத களஞ்சிய வெடிப்பு, பொதுபலசேனாவின் இனவிரோத செயற்பாடுகள் தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் மாணவர்களுக்கிடையிலான மோதல். இந்த சம்பவங்களை அவதானிக்கும்போது இதற்கு பின்னால் சதித்திட்டங்கள் இருப்பதாகவே தோன்றுகின்றது. 

அத்துடன் யாழ். பல்கலைக்கழக சம்பவத்தை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பெரிதுபடுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். 

குறிப்பாக விமல் வீரவன்ச, யாழ். பல்கலை சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் தெற்கில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் சிங்கள இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள் என தெரிவித்துவருகின்றார்.

எனவே யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான மோதலின் பின்னணியில் சதி நடவடிக்கைகள் இருக்கலாம். இதன் உண்மைத்தன்மையை கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.