(செ.தேன்மொழி)

தொற்று நீக்கல் சட்டவிதிகளுக்கமைய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிசெயற்பட்டதாக இதுவரையில் 124 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 34 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணிவரை மாத்திரம் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை , கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இன்று காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 124 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து  34 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , கொரோனா வைரஸ் பரவலினால் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.