இலங்கை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு தூய்மையான எரிபொருளை வழங்கும் லாஃப் காஸ் மற்றும் பிராந்தியத்தின் அதிகார மையாக விளங்கும் அபான்ஸ் ஆகிய நீண்டகாலமாக நிலைத்திருக்கும் இலங்கையின் இரண்டு உண்மையான வர்த்தகநாமங்கள் நாடு முழுவதிலுமுள்ள இலங்கையர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் வகையில் ஒப்பந்தமொன்றில் இணைந்துள்ளன.

இந்த மூலோபாயக் கூட்டாண்மை மூலம் வெற்று சிலிண்டர்கள், காஸ் குக்கர்கள், ப்ரீ ஸ்டான்டிங் குக்கர்கள் உள்ளிட்ட சமையல் தொடர்பான தயாரிப்புக்களை ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்வதற்கான வசதி ஏற்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2020 செப்டெம்பர் 30ஆம் திகதி கொழும்பு சிட்டி சென்டரில் நடைபெற்றது. 

லாஃப்ஸ் ஹொல்டிங்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் பியதாச குடபலகே, அபான்ஸ் பிஎல்சியின் குழு முகாமைத்துவப் பணிப்பாளர் பெஹ்மன் (ரிடோ) பெஸ்டோன்ஜி, லாஃப் காஸ் பிஎல்சியின் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சமிந்த எதிரிவிக்ரம மற்றும் அபான்ஸ் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி புத்திக்க தர்மவர்த்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு நடைபெற்றது. 

“வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவை அனுபவத்தை வழங்கும் வகையில் மக்களின் நம்பிக்கையை வென்ற இரண்டு பிரபல வர்த்தக நாமங்கள் இந்தக் கூட்டாண்மையில் இணைவது வாடிக்கையாளர் தொடர்பான தொழில்துறையில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாகும். 

நிலையான வெற்றியை அனுபவிக்கும் உண்மையான இரண்டு வர்த்தக நாமங்கள் என்ற வகையில் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான, உயர்தர சமையல் தயாரிப்புக்களை தாமதங்கள் இன்றி, எவ்வித சிரமங்களும் இன்றி பெற்றுக்கொள்வதற்கான அணுகலை வழங்க நாம் தயாராகவிருக்கின்றோம்” என குடபலகே தெரிவித்தார். 

“இலங்கையில் உருவாகி பெயர் பெற்ற இரண்டு நிறுவனங்களான அபான்ஸ் குரூப் மற்றும் லாஃப்ஸ் ஹோல்ட்டிங்ஸ் ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறித்து அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன். 

இந்த மூலோபாயக் கூட்டாண்மையானது பொருளாதார நெருக்கடி போன்ற விசேட சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட நீண்டகாலத்துக்கு இரண்டு வர்த்தக நாமங்களையும் மேம்படுத்தி வளர்ப்பதற்கான பரஸ்பர நன்மைகளுக்கு வழிவகுக்கும். 

இந்தக் கூட்டாண்மையானது வாடிக்கையாளர்களுக்கு லாஃப்ஸ் எரிவாயு தரிப்புக்களை நாடு முழுவதிலுமுள்ள அபான்ஸ் காட்சியறைகளின் ஊடாக தொந்தரவில்லாமல் கொள்வனவு செய்வதற்கான வசதி கிடைக்கிறது” என அபான்ஸ் பிஎல்சியின் குழு முகாமைத்துவப் பணிப்பாளர் பெஹ்மன் (ரிடோ) பெஸ்டோன்ஜி கருத்துத் தெரிவித்தார். 

வர்த்தக பிரசார நடவடிக்கைகள், விலை, சேவை தொடர்பான கழிவுகள் மற்றும் ஏனைய பல விசேட சலுகைகளின் ஊடாக இந்த இரண்டு கம்பனிகளும் வாடிக்கையாளர்களை அணுகுவதற்குத் திட்டமிட்டுள்ளன. 

சில்லறை விற்பனை செயற்பாடுகள், சேவை, போக்குவரத்து சேவைகள், உற்பத்தி, ரியல் எஸ்டேட் மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட வணிகப் பிரிவுகளில் அபான்ஸ் குரூப் சந்தையின் முன்னணியாளராகத் திகழ்கிறது. 

உலகின் சிறந்த வர்த்தக நாமங்கள் சிலவற்றுக்கு இலங்கையின் பிரதிநிதியாகவும் இந்தப் பெருநிறுவனம் காணப்படுகிறது. 

1968ஆம் ஆண்டு முதல் அபான்ஸின் செல்வாக்கு சீராக வளர்ந்து இலங்கையின் அனைத்து மூலைகளிலும் வியாபித்துள்ளது. 

இந்த அமைப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமாக மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

லாஃப்ஸ் காஸ் பிஎல்சி, வீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறைகளுக்கான எல்பிஜி எரிபொருள் வளத்தை வழங்குவது மற்றும் நிறுவுவதில் ஈடுபட்டுள்ள முன்னோடியான எரிசக்தி வழங்குனராகும்.

 8,200 டீலர்கள் மற்றும் 31 விநியோகஸ்தர்கள் எனத் தனது வலையமைப்பை தொடர்ச்சியாக விஸ்தரித்து நாடு முழுவதிலுமுள்ள நகரங்கள், புறநகர் பகுதிகள் மற்றும் கிராம மட்டங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தனது சேவையை இலகுபடுத்தி வருகிறது. 

லாஃப்ஸ் காஸ் பிஎல்சி 1345 அவசர தொலைபேசி இலக்கம், www.LAUGFSgas.lk என்ற இணையத்தளம் மற்றும் 0768427427 வட்ஸ்அப் இலக்கம் போன்ற கொள்வனவுத் தளங்களை மேம்படுத்தி வாடிக்கையாளர்களுக்கான சேவை பொறிமுறையை நிறுவியுள்ளது. 

தமது ஒன்லைன் ஓடர் வசதிகளின் மூலம் இலங்கையில் தொடர்பற்ற கொடுப்பனவு முறைகளைக் கொண்டுள்ள ஒரேயொரு டிஜிட்டல் சேவை வழங்குநராகவும் லாஃப்ஸ் காஸ் திகழ்கிறது.