கொரோனா வைரஸ் தாக்கம் பேரிடியாக அமைந்துள்ளது. எங்கே நம் நாடு? அமெரிக்கா, இந்தியா போன்று இங்கும் நிலைமை அமைந்து விடுமோ? என மக்கள் அஞ்சுகின்றனர். இதேவேளை, பிரான்சிலும் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நிலைமையை முறையாகக் கடைப்பிடித்து வெற்றிகொண்ட இலங்கை அதன் மூன்றாம் அலையில் கோட்டை விட்டுவிட்டது. வைத்தியசாலை அலுவலகங்கள், வங்கி, கலாசாலைகள், பல்கலைக்கழகம் என்று அதற்கு எதுவுமே விதிவிலக்கல்ல.
பல்வேறு அலுவலகங்கள் ஊழியர்களை வைத்திருப்பதா? இல்லை வீட்டுக்கு அனுப்புவதா? என்று புரியாது தடுமாறுகின்றன. எனினும், அனைத்து செயற்பாடுகளும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
ஊரை முடக்குவதில் எவ்வித பயனும் இல்லை, மாறாக மக்களே தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்ற நிலையே அரச மட்டங்களில் காணப்படுகின்றது.
நாட்டில் நேற்று மாத்திரம் 92 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கொரோனா கொத்தணி பரவலில் சிக்கிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1346 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,791 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயரலாம். பிக்குகள், வைத்தியர்கள், தாதிகள் கூட தொற்றாளர்களாக உள்ளனர்.
இதனிடையே மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை நிறுவனமானது அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதில் 341 ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூன்று கட்டங்களாக இந்தியா விசாகப்பட்டினத்திலிருந்து தனித்தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா தடுமாறி கொண்டிருப்பது தெரிந்ததே. அந்த வகையில் நாட்டின் நிலைமை எவ்வாறு அமையும் என்று ஊகிக்க முடியாது இருப்பதாக பலரும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.
நாட்டின் நிலைமைக்கு அரசாங்கமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா சவாலை முறியடிக்க அனைவரும் ஒருமித்த ரீதியில் பாதுகாப்பான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவற்றுக்கு மத்தியில் "எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்" போன்று திருகோணமலையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது பிக்கு ஒருவரின் உதவியுடன் தமிழ் பாரம்பரிய நிலமான 358 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலத்தை தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளது.
புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பௌத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் நிலத்தை சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளதாக தென்னமரவடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி பனிக்கவயல் தொடக்கம் தென்னமரவடி வரையான 358 ஏக்கர் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்லியல் திணைக்களத்தால் எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளன.
சம்பவத்தை அறிந்து அப்பகுதிக்கு சென்ற தென்னமரவடி மக்கள் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அரிசிமலை பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டு எல்லை கற்கள் நாட்டப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்கை பண்ணுவதற்காக தயார் படுத்தப்பட்ட வயல்களுக்கு நடுவேயும் எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.
இவ்வாறு அபகரிக்கப்பட்ட 358 ஏக்கர் பரப்பில் தென்னமரவடி கிராமத்தின் ஆரம்பத்தில் பௌத்த விகாரை ஒன்றுக்கான ஆரம்பகட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தபட்டுள்ளனர்.
இவ்வாறு பாரிய அளவிலான நிலம் கையகப்படுத்தபட்டுள்ளமையின் பின்னணியில் சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான திட்டமாக இருக்கலாம் என, கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனைப் பார்க்கும் பொழுது,
ஒரு புறம் வேடன்; மறு புறம் நாகம். என்ற கண்ணதாசனின் வரிக்கள் தான் நினைவுக்கு வருகிறது.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM