அனைத்து ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களும் இந்த வாரம் புதுப்பிக்கப்பட வேண்டும் என அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தற்போதைய முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை பூரணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களின் பிரதானிகளிடம் கேட்டுக்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தரவுகளை சேகரிப்பது மிகவும் முக்கியமானதாகும் என்றும் எதிர்வரும் 3 தினங்களில் இவற்றை பூரணப்படுத்த வேண்டும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதார பிரிவினர் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.

இந்த ஊழியர்களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை கண்டுகொள்வதிலேயே இந்த பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன. பெரும்பாலானோர் தொழிலுக்கு வரும்பொழுது குடியிருக்கும் இடத்தில் தற்பொழுது இல்லை. இதேபோன்று அவர்களது தொலைபேசி இலக்கங்கள் கூட மாற்றமடைந்துள்ளன.

இதன் காரணமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து நிறுனங்களிடமும் நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.