விராட் கோலியின் பக்க பலத்துடன் டிவில்லியர்ஸின் அனல் பறந்த ஆட்டத்தினால் பெங்களூரு அணி 194 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 28 ஆவது போட்டி விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் டைர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

சார்ஜாவில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ஞ்ச் மற்றும் தேவதூத் பாடிக்கல் பெங்களூரு அணிக்காக சிறந்ததொரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் இணைந்து 7 ஓவர்களுக்கு 58 ஓட்டங்களை பெற, பெங்களூரு அணியின் முதல் விக்கெட் 8 ஆவது ஓவரின் நான்காவது பந்துக்கு வீழ்த்தப்பட்டது.

அதன்படி படிக்கல் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பெங்களூரு அணியின் முதல் விக்கெட் 67 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் விராட் கோலியுடன் கைகோர்த்த பின்ஞ்ச் அதிரடியாக துடுப்பெடுத்தாடினார். எனினும் அவர் 13 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய டிவில்லியர்ஸ் விராட் கோலியுடன் இணைந்து வான வேடிக்கை காட்டி 23 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக அரைசதம் கடந்தார்.

டிவில்லியர்ஸ் தொடர்ந்தும் மைதானத்தில் அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களை குவித்தது. 

விராட் கோலி 28 பந்துகளில் ஒரு பவுண்டரி அடங்கலாக 33 ஓட்டங்களுடனும், டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.